September 22, 2026
சினிமா செய்திகள் நடிகர்

இரண்டாவது இடம் பிடித்த அஜித் குழு – ரசிகர்கள் பெருமிதம்

நடிகர் அஜித நடிப்பைத் தாண்டி புகைப்படக் கலை, பைக் ரேஸ், ஆளில்லா விமானங்களை வைத்து சாகசம் செய்வது போன்ற செயல்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் அண்ணாபல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜியின் ஆளில்லாத சிறிய ரக ட்ரோன் விமானத்தை வடிவமைக்கும் மாணவர் குழுவிற்கு ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டார்.

இதனிடையே அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதுமுள்ள 111 பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குள் ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடும் போட்டி நடைபெற்றது.

இதில், பல்வேறு குழுக்களுடன் அஜித் ஆலோசகராக உள்ள எம்.ஐ.டி மாணவர்கள் குழுவும் பங்கேற்றது. அதில், எம்.ஐ.டி மாணவர்கள் தயாரித்த தக்‌ஷா என்ற ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடப்பட்டது.

தரையில் இருந்து 10 முதல் 15 அடி உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டதுடன், 6 மணி நேரம் 7 நிமிடம் 45 விநாடிகள் வரை பறந்தது. மேலும் இந்த ஆளில்லா விமானம் 10 கிலோ வரையிலான எடையை சுமக்கும் என்பதால் இதை ஏர் ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்தலாம் என அஜித் யோசனை கூறியதாக தகவல் வெளியானது.

இந்த சாதனையைத் தொடர்ந்து தக்‌ஷா குழுவுக்குத் தமிழக அரசு உயரிய விருந்து வழங்கி கவுரவம் செய்தது.

அதன் பின்னர், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் மாநிலத்தில் உள்ள டால்பியில் கடந்த 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது.

உலகம் முழுவதிலுமிருந்து 55 ஆளில்லா விமானங்கள் இப்போட்டியில் பங்கேற்றன. அதில் 11 விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் அஜித் ஆலோசகராக இருந்த தக்‌ஷா குழு இரண்டாவதாக இடம்பிடித்தது.

தொடர்ந்து 6 மணி நேரம் பறந்த தக்‌ஷா ட்ரோனின் சாதனை உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. “சர்வதேச வான்வெளி போட்டி குழு” இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இந்தத் தகவலைப் பெருமையுடன் பகிர்ந்து வருகிறார்கள் அஜீத் ரசிகர்கள்.

Related Posts