அருள்நிதி படத்துக்கு அதிரடிப் பெயர் – விவரம்

டிமாண்டி காலனி 2 வெற்றிப்படத்துக்குப் பிறகு, நடிகர் அருள்நிதி தகராறு பட இயக்குநர் கணேஷ் இயக்கத்தில் ஒரு படம், கோவை சுப்பையா தயாரிப்பில் புதிய இயக்குநர் விஜயரங்கன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றோடு பேசன் ஸ்டியோஸ் தயாரிப்பில் என்னங்க சார் உங்க சட்டம் படத்தை இயக்கிய பிரபுஜெயராம் இயக்கத்தில் ஒரு படம், இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவற்றில் முத்தையா இயக்கும் படத்தில் நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.ஹரீஷ்பேரடி வில்லனாக நடிக்கிறார்.இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.தொடக்கத்தில் ரகுநந்தன் இசையமைக்கிறார் என்று சொல்லப்பட்டது இப்போது ஜிப்ரான் ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
முத்தையா இயக்கம் என்றால் அது கிராமத்துக்கதையாகத் தான் இருக்கும் என்பதை மாற்றி முழுக்க முழுக்க நகரம் சார்ந்த படமாக இந்தப் படத்தை எடுக்கவிருக்கிறாராம்.
குத்துச்சண்டைப் போட்டிகளை மையமாகக் கொண்டு திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
அர்ள்நிதி குத்துச் சண்டை வீரராக நடிக்கிறார். இந்த வேடத்தில் நடிப்பதற்காக கடும் உடற்பயிற்சிகள் செய்தும் உடல் எடை கூட்டியும் தயாராகியிருந்தார் அருள்நிதி.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.இப்போது மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டது என்று சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்கள்.இன்னும் ஓரிரு நாட்கள் படப்பிடிப்பு மட்டும் பாக்கி இருக்கிறதாம்.அதுவும் இன்னும் சில நாட்களில் தொடங்கி முடிவடைந்துவிடும் என்கிறார்கள்.
இந்நிலையில் இந்தப்படத்தின் பெயர் முடிவு செய்யப்பட்டுவிட்டதாம். விரைவில் அறிவிக்கவிருக்கும் அந்தப் பெயர் ராம்போ.இந்தப் பெயரைக் கேட்டாலே சில்வெஸ்டர் ஸ்டோலனின் கட்டுமஸ்தான உடல்தான் எல்லோருக்கும் நினைவு வரும்.
அருள்நிதியும் இந்தப்படத்துக்காக கடும் முயற்சிகள் மற்றும் பயிற்சிகள் செய்து அதுபோலவே உடலை மாற்றிக் கொண்டிருக்கிறாராம்.கதைப்படி குத்துச்சண்டை வீரர் என்பதால் அத்தோற்றம் படத்துக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.
இப்படத்தின் பெயர் அறிவிப்பின் போது அருள்நிதியின் தோற்றமும் வெளியிடப்படும் அப்போது அனைவரும் அருள்நிதியை வியந்து பார்த்து பாராட்டுவார்கள் என்று படக்குழு உறுதியாகச் சொல்கிறது.
இந்தப்படத்தை சன் தொலைக்காட்சி மற்றும் சன் நெக்ஸ்ட் இணையதளம் ஆகியனவற்றில் நேரடியாக வெளியிடலாம் என்று திட்டமிட்டுத்தான் தொடங்கினார்கள்.
இப்போது படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது என்பதால் முதலில் திரையரங்குகளிலேயே வெளியிட்டுவிடலாம் என்கிற எண்ணத்துக்கு வந்திருக்கிறார்களாம்.
படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை ஆகியன வெளியாகும்போது திரையரங்குகளில் வெளியாகும் நாளும் அறிவிக்கப்பட்டுவிடும் என்று சொல்கிறார்கள்.