இடதுசாரி ஆகிறாரா ரஜினி? வேட்டையன் கதை இதுவா?

ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன்.இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள
இப்படத்தில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி,ரோகிணி,அபிராமி,ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நிறைய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்துக்கு இசை அனிருத், ஒளிப்பதிவு எஸ்.ஆர்.கதிர்,படத்தொகுப்பு பிலோமின் ராஜ்,தயாரிப்பு வடிவமைப்பு கே.கதிர்,சண்டைப் பயிற்சி அன்பறிவ்,ஒப்பனை பானு மற்றும் பட்டினம் ரஷீத்,உடை வடிவமைப்பு அனு வர்தன்.
லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார்.
இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தில், ரஜினிகாந்த் முன்னாள் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் என்றும் அவர் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என்றும் சொல்லப்பட்டது.
கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்திலும் அவர் இதேபோன்றதொரு வேடம்தான் ஏற்றிருந்தார்.மறுபடியும் அப்படி ஒரு வேடமா? அதை ரஜினிகாந்த் ஏற்றுக்கொண்டது எப்படி? என்கிற கேள்விகளுக்கான விடை கசிந்துள்ளது.
இந்தப்படத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்த போது என்கவுண்ட்டர் என்கிற பெயரில் பலரைச் சுட்டுக் கொல்கிறார் ரஜினிகாந்த்.அதை மிகப்பெருமையாகவும் நினைக்கிறார்.பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு ஒரு கட்டத்தில் அவர் கொலை செய்த ஒருவரின் குடும்பம் பற்றி அறிய நேரிடுகிறது.அந்நிகழ்வு அவர் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
அதன் விளைவாக, அவர் சுட்டுக் கொன்ற எல்லோர் வீட்டுக்கும் சென்று அவர்களின் வாழ்நிலை, கொலைக்கு முன் கொலைக்குப் பின் நடந்தவை ஆகியனவற்றை அறிந்து அதிர்கிறார்.அப்போது பல்வேறு உண்மைகள் அவருக்குப் புலப்படுகின்றன.அவற்றினால் அவர் தெளிவு கொள்கிறார்.
அதன்பின், என்கவும்ட்டர் எனப்படும் அதிகாரப்பூர்வ கொலைகளுக்கு எதிராகப் பேசத் தொடங்குகிறார். இதுதான் அந்தப்படத்தின் கதை என்று தகவல் உலவுகிறது.
இது சரியாக இருக்குமென்றால், ஜெயிலர் படத்தில் ஏற்ற வேடத்துக்கு நேர் எதிரான வேடமாக இது இருக்கும்.
ரஜினிகாந்த் பிற்போக்குத்தனங்களை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் ஒரு வலதுசாரி,அது அவருடைய படங்களிலும் எதிரொலிக்கும் என்கிற விமர்சனங்கள் நிறைய உண்டு.
ஆனால், பா.இரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்த கபாலி, காலா ஆகிய படங்களும் அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வெளியான லால்சலாம் ஆகிய படங்களின் கருத்துகள் மூலம் அவர் ஓர் இடதுசாரியாக அடையாளப்பட்டார்.அவற்றினால் அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தன.
இந்நிலையில், வேட்டையன் படத்தில் அவர் ஏற்றிருக்கும் வேடம் ரஜினிகாந்த்தின் சொந்தக் கருத்துக்கு நேர் எதிரானது என்பது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் அமைந்துள்ளது.