செய்திக் குறிப்புகள்

துஷாரா விஜயன் ஹீரோ அதிதிபாலன் வில்லன் – விவரம்

தேசியவிருது வென்ற இயக்குநர் ஏ.சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள எக்ஸாம் (EXAM) இணையத் தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஏழு அத்தியாயங்களாகத் தயாராகி இருக்கும் இந்த இணையத்தொடர் 2026 மே 15 ஆம் தேதி முதல் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

சஸ்பென்ஸ் திரில்லரான இந்த இணையத் தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் ஏப்ரல் 30 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி – இயக்குநர் ஏ.சற்குணம் – துஷாரா விஜயன் – அதிதி பாலன் – ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் புஷ்கர் பேசுகையில்….

நாங்கள் ‘வா குவாட்டர் கட்டிங்’எனும் திரைப்படத்தின் பணியைத் தொடங்குவதற்கு முன் ஏ.சற்குணம் இயக்கத்தில் உருவான ‘களவாணி’ திரைப்படம் வெளியாகி வெற்றியைப் பெற்றிருந்தது.சிறியபட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெறமுடியும் என்ற சாதனையை ஏ.சற்குணம் படைத்திருந்தார்.‌இதைத்தான் நாங்கள் தயாரிப்பாளர்களிடத்தில் குறிப்பிட்டு,’பெரிய ஸ்டார்ஸ் தேவையில்லை.சின்னபட்ஜெட்டில் நடிகர்களை வைத்து பெரியவெற்றியைப் பெறமுடியும் என எடுத்துச் சொன்னோம்
சினிமாவில் ஒரு ஹீரோவின் கதையைத்தான் சொல்கிறோம்.‌ஆனால் டிஜிட்டல்தளத்தில் வெளியாகும் இணையத்தொடர் நீண்டவடிவம் கொண்டதால்..அதைக்கடந்து சில விசயங்கள் அவசியமாகத் தேவைப்படும்.‌’எக்ஸாம்’தொடரின் முன்னோட்டத்தைப் பார்க்கும்போது ஜான்சி மற்றும் மரமல்லி எனும் இரு கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒரு சம்பவம்.ஜான்சி சிக்குவாளா? சிக்கமாட்டாளா? என்ற ஒரு டென்ஷன் இருந்துகொண்டே இருக்கும்.இதைக்கடந்து எக்ஸாம் என்ற போட்டித்தேர்வு மோசடி குறித்த கதையும் உள்ளது.‌
சற்குணம் எங்களிடம் முதலில் கதையைச் சொல்லும்போது இந்த விசயங்கள் எல்லாம் அதில் இருந்தது.‌கதையைக் கேட்டவுடன் இது நீண்ட வடிவத்திற்கானது என்பதைப் புரிந்துகொண்டோம்.உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் வெளியில் இருந்துவந்த ஒரு திரைக்கதையை படித்து ஓகே சொன்னது சற்குணத்தின் கதையை மட்டும்தான்.’வதந்தி’ தொடரை எழுதிய ஆண்ட்ரூஸ்-ஐ,எங்களுக்கு முதலில் இருந்தே தெரியும்.
நாங்கள் கதையைக் கேட்டவுடன் ஆறு ஏழு அல்லது எட்டு அத்தியாயங்கள்வரை விறுவிறுப்பாக செல்லக்கூடிய அம்சங்கள் இருக்கிறதா? என்பதைதான் பார்ப்போம்.அந்தவிசயத்தில் இயக்குநர் சற்குணம் மிகவும் தெளிவாக இருந்தார்.
நிறைய வெப்சீரிஸ்களை பார்த்திருந்தால் அவை சினிமாவாக தயாராகி இருக்கலாம்.இருந்தாலும் அதனை அங்கங்கே சற்று இழுத்து வெப்சீரிஸாக மாற்றி இருப்பார்கள்.ஆனால் இயக்குநர் சற்குணம் முதலிலேயே தெளிவாக இது நீண்டவடிவத்திற்கான கதையாகத்தான் என்று சொன்னார்.
இணையத்தொடருக்கான படப்பிடிப்பு என்பது மிகவும் தெளிவான திட்டமிடலுடன் இருக்கவேண்டும்.‌அந்தவிசயத்திலும் இயக்குநர் சற்குணம் மிகத்தெளிவான திட்டமிடலுடன் பணியாற்றினார்.அந்தவிசயத்திலும் சற்குணம் கிரேட் என்றார்.

இயக்குநர் காயத்ரி பேசுகையில்….

அவர் எங்களிடம் சொன்னகதை மிக நன்றாக இருந்தது.ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்கும் ஒரு இணையத்தொடரை தயாரிப்பதற்கும் சில இலக்கணங்கள் உண்டு.அதற்காக பிரத்யேகமாக எழுதவேண்டும்.‌நாங்கள் கதையைப்பற்றி விவாதிக்கும்போது அதை அவர்கள் திறந்தமனதுடன் நாங்கள் சொல்லும் விசயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.அது இயக்குநர் சற்குணத்திடம் இருந்தது.அவர் எப்போது படைப்பு குறித்து எந்த ஆலோசனைகள் சொன்னாலும் குறிப்புகள் வழங்கினாலும் மறுக்காமல் கேட்டுக்கொண்டு அதற்கான விளக்கத்தை அளிப்பார்.
ஒரு ப்ராஜெக்ட் என்றால் நிறைய விசயங்கள் ஒன்றாக கூடிவரவேண்டும்.அதிலும் குறிப்பாக நடிகர்களுடைய விசயத்தில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.திறமையான நடிகர்களாக-கலைஞர்களாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.இந்தவிசயத்தில் துஷாராவும்,அதிதியும் எங்களது முதன்மையான தேர்வாக இருந்தது.குறிப்பாக அதிதியுடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம்.
இந்தத்தொடரில் முக்கியமான ஒரு கேரக்டர் இருக்கிறது.இதற்கு யார் பொருத்தமாக இருப்பார்? என்று யோசித்துக்கொண்டே இருந்தோம்.ஒரு வருடத்திற்கு முன் நடிகர் அப்பாஸ் திடீரென்று வீடியோகாலில் வந்து மீண்டும் நடிக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார்.அவருக்கென்று ஒரு தனிஇரசிகர் கூட்டம் உண்டு.அவரை அந்த கேரக்டருக்காக தேர்வு செய்தோம்.அவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்.
திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.ஒளிப்பதிவாளருக்கு இதுதான் முதல்படைப்பு.கலைஇயக்குநருக்கும் இதுதான் முதல்படைப்பு.அதனால் இயக்குநர் சொன்னதைப்போல் எக்ஸாம் தொடரின் தொடக்கத்தில் இருந்து இப்போதுவரை அனைவரும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக உழைத்து வருகிறோம்.‌
பிரைம் வீடியோ நிறுவனத்தினை சார்ந்த அனைவரும் இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள்.நாங்கள் இணையத்தொடரை உருவாக்கினாலும் அதனை இரசிகர்களிடத்தில் சென்றடைய செய்யவேண்டிய அனைத்துப் பணிகளையும் பிரைம்வீடியோ நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் ஏ.சற்குணம் பேசுகையில்….

சங்கர் ஐ ஏ எஸ் அகாடமியின் நிறுவனரான சங்கர் என் நண்பர்.போட்டித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வழக்கு தொடுப்பதற்காக சென்று இறுதியில் வக்கீலாக மாறியவரும் என் நண்பர்.தமிழக அரசு தேர்வுகளுக்காக பயிற்சி பெறும் நிறைய நண்பர்கள் எனக்குத் தெரியும்.இவர்கள் அனைவரும்தான் இந்த இணையத்தொடரை உருவாக்குவதற்கு முதல்காரணம்.
நடுத்தரவர்க்கத்து மக்களின் மிகப்பெரிய கனவுதான் அரசுப்பணிக்கான தேர்வு.அதில் நடைபெற்ற முறைகேடுகளை அப்படியே பதிவு செய்யாமல் அதனை ஒரு திரில்லர் மோடில் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டு ஏழு அத்தியாயங்களாக இந்த எக்ஸாம் தொடர் உருவாகி இருக்கிறது.
நான் இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி அவர்களிடம் கதையைச் சொல்லும்போது அவர்கள் என்னிடம் சொன்ன ஒரே விசயம்,அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற பரபரப்பு ஒவ்வொரு காட்சியிலும் இருக்கவேண்டும்.இதில் நாம் ஒரு நல்லவிசயத்தைச் சொல்கிறோம் என்ற எல்லையைக் கடந்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் அடுத்து என்ன நடக்கும் என்ற திரில்லிங்கான தருணங்களாகவும் இருக்கவேண்டும் என்பதை எப்போதும் நட்புணர்வுடன் பகிர்ந்துகொண்டே இருந்தனர்.இந்தத்தொடருக்கு அவர்களின் இந்த ஆலோசனையும் ஒரு முக்கியகாரணமாக இருந்தது.‌
அதன்பிறகு அவர்கள் எனக்குக் கொடுத்த சுதந்திரம்.கதையைக் கேட்டவுடன் ஓகே சொல்லாமல் உடன் இருந்து அந்த திரைக்கதையை முழுவதுமாகப் படிக்கிறார்கள்.மீண்டும் என்னை அழைத்து அதுதொடர்பாக விவாதிக்கிறார்கள்.‌
அதேதருணத்தில் தயாரிப்பு விசயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்துகொள்ளாமல் தரமான படைப்பாக உருவாக்கினார்கள்.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு விசயம் என்னவென்றால் ஒரு படத்தைத் தொடங்கும்போது தயாரிப்பாளருக்கும்,இயக்குநருக்கும் நல்ல புரிதல் இருக்கும்.ஆனால் அந்தப்படம் நிறைவடையும்போது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே கருத்து முரண் எழுந்திருக்கும்.‌இப்படி ஒரு அனுபவம் இல்லாமல் நான் மகிழ்ச்சியுடன் பணியாற்றிய முதல்படைப்பு வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான எக்ஸாம் தான்.இதற்காக இவர்கள் இருவருக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்கிறேன் என்றார்.

நடிகை துஷாரா விஜயன் பேசுகையில்…..

இந்த இணையத்தொடர் மூலம் நான் முதன்முதலாக டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறேன்.எனது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் நேரடியாக பிரைம்வீடியோ டிஜிட்டல் தளத்தில்தான் வெளியானது.இந்தவகையில் நான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி.
எக்ஸாம் இந்தத்தொடர்- நான் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கையுடன் ஒப்புக்கொண்ட ஒரு ப்ராஜெக்ட்.‌ புஷ்கர் காயத்ரி என்று சொன்னவுடன் ஓகே சொன்னேன்.அதிலும் இயக்குநர் ஏ.சற்குணம் என்று சொன்னவுடன் டபுள் ஓகே சொல்லிவிட்டேன்.‌
ஜான்சி கதாபாத்திரம் கடினமானது.அவள் ஒரு அப்பாவியான பெண்.ஆனால்,கடினமான முடிவுகளை எடுக்கக்கூடியவள்.அப்படித்தான் அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்தக்கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும்போது எனக்கு சவாலானதாக இருந்தது என்னவென்றால் அவள் முடிவெடுக்கும் தருணம்.ஆனால் அதைப்பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல் நான் இருந்ததற்கு இயக்குநர் சற்குணம்தான் முழுகாரணம்.
நிச்சயமாக இந்த இணையத்தொடர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
நான் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவள்.‌அதுபோன்ற கதைதான் எக்ஸாம்.
இதை நான் தேர்ந்தெடுத்ததை விட அந்த கதாபாத்திரம்தான் என்னைத் தேர்ந்தெடுத்தது என்று நம்புகிறேன்.இதுபோன்ற கதைகளில்தான் நான் தொடர்ந்து நடித்துவருகிறேன்.இனிமேலும் தொடர்ந்து நடிப்பேன்.
இந்தக்குழுவினருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்கமுடியாதது.குறிப்பாக ஸ்டண்ட்மாஸ்டர் தினேஷ் உடன் பணியாற்றியது மறக்கமுடியாது.இந்தப்படத்தில் நான் சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறேன்.படப்பிடிப்புத்தளத்தில் அந்தக்காட்சிகளில் நடிப்பதுதான் சற்று கடினமானதாகவும் சவாலானதாகவும் இருந்தது.ஜான்சி கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகை அதிதி பாலன் பேசுகையில்….

மரமல்லி கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி மற்றும் சற்குணத்திற்கு நன்றி.மரமல்லி கதாபாத்திரத்திற்காக உடல்ரீதியாக சில முன்தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டியது இருந்தது.சண்டைக்காட்சிகளுக்காக நாங்கள் நிறைய ஒத்திகையும் பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டியதிருந்தது.‌நான் முதல்முறையாக சண்டைக்காட்சிகளில் நடிப்பதால் அதனை மகிழ்ச்சியோடும் சந்தோசத்துடனும் பணியாற்றினேன்.நிறைய அடிபட்டது. அடி வாங்கினேன்.நாங்கள் இருவரும்தான் (துஷாராவும் அதிதியும்) அடித்துக் கொண்டோம்.‌
இந்த கேரக்டர் தொடங்கும்போது சற்று வில்லத்தனமாகத்தான் தொடங்கும்.அதற்குமேல் எதையும் நான் தற்போது சொல்ல இயலாது. இயக்குநர் சற்குணம் சார் இந்த கேரக்டரை பற்றி என்னிடம் விவரித்தபோது நான் இதற்கு முன் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்பதால் ஒப்புக்கொண்டேன்.அதற்குமுன் நான் இயக்குநர் சற்குணத்தின்‌ மிகப்பெரிய இரசிகை.அவருடைய படங்களை பார்த்திருக்கிறேன்.எல்லோருடனும் இணைந்து பணியாற்றியது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts