சினிமா செய்திகள்

மூன்றாவது படத்தில் அளப்பரிய முன்னேற்றம் – ஆச்சரிய அபிஷன் ஜீவிந்த்

சசிகுமார்,சிம்ரன் உட்பட பலர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.அப்படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்,அடுத்து கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிவிட்டார்.

அவர் கதாநாயகனாக நடித்து வெளியாகி வெற்றிபெற்ற படம் வித்லவ்.இப்படத்தை லவ்வர்,டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய மதன் எழுதி இயக்கியிருந்தார்.அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்திருந்தார். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் ஸயான் பிலிம்ஸ் சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் அப்படத்தைத் தயாரித்திருந்தனர்.

இதற்கடுத்து அபிஷன் ஜீவிந்த், இன்னொரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

புதுஇயக்குநர் கெளதம் எழுதி இயக்குகிறார்.இந்தப்படத்தை, டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் வித்லவ் படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றிய பாலா தயாரிக்கிறார்.

இந்தப்படத்தின் தொடக்கவிழா எளிமையாக நடைபெற்றது.

ஆனால்,படம் அவ்வளவு எளிமையாக இருக்காது பெரும் கவனம் ஈர்க்கும் வகையில் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

அதற்குக் காரணம்,இந்தப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியிருக்கிறார்கள். அவர் ஒப்புக்கொள்வாரா? என்கிற ஐயத்தில் இருந்தாலும் அவரைத் தொடர்புகொண்டு பேசுவோம் என்று முயன்றிருக்கிறார்கள்.

அவர் கதையைக் கேட்டுவிட்டு உடனே ஒப்புதல் வழங்கியதோடு சம்பள விசயத்திலும் கறார் காட்டாமல் இணக்கம் காட்டினாராம்.

அதனால், படக்குழு மிகுந்த உற்சாகத்துடன் பணிகளைத் தொடங்கியிருக்கிறது.

படத்தில் நடிக்கவிருக்கும் கதாநாயகி மற்றும் மற்ற நடிகர்கள் தேர்வு நடந்துகொண்டிருக்கிறதாம்.

படத்தின் முன் தயாரிப்புப்பணிகளை முழுமையாக முடித்துவிட்டு படப்பிடிப்புக்குச் செல்வது. ஒரேகட்டமாக மொத்தப் படப்பிடிப்பையும் நிறைவு செய்வது, படப்பிடிப்பு நாட்கள் மிகத் தேவையான அளவு மட்டும் இருப்பது ஆகியனவற்றைச் சரியாகத் திட்டமிட்டுக் கொண்டு படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார்களாம்.

முதல் படத்தில் இயக்குநராக வெற்றி பெற்ற அபிசன் ஜீவிந்த், இரண்டாம் படத்தில் கதாநாயகனாக வெற்றி பெற்றார். அதேநேரம் தமிழ்நாட்டில் அல்லது தமிழ்மக்களிடம் மட்டுமே சென்று சேர்ந்த நாயகனாக இருக்கிறார்.

இப்போது உருவாகவிருக்கும் மூன்றாவது படத்தில் அவர் தமிழ்நாட்டைக் கடந்து தென்னிந்தியா அறியும் நடிகராக மாறுவார் என்று நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.

எண்ணியது ஈடேறட்டும்.

Related Posts