வியாபாரத்தில் அசத்திய லப்பர் பந்து – விவரம்
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் படம் லப்பர் பந்து. இவர் கனா, எப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் இணை இயக்குநர் மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்துக்கு வசனம் எழுதியவர்.
இப்படத்தில், ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் சஞ்சனா கிருஷ்ண மூர்த்தியும் நடிக்கின்றனர். இவர்களுடன் தேவதர்ஷினி,காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.தினேஷ்குமார் புருசோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் அன்பு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2023 மார்ச் மாதத்தில் இப்படம் தொடங்கப்பட்டது.படப்பிடிப்பு மற்றும் அதற்குப் பிறகான பணிகள் ஆகியன அனைத்தும் நிறைவடைந்துவிட்டன.
ஆனால்,படத்தின் பாடல்கள் முன்னோட்டம் ஆகிய எதுவும் வெளியிடப்படவில்லை. படம் எப்போது வெளியாகும் என்கிற அறிவிப்பும் இல்லை.
முழுமையாகத் தயாரான ஒரு படத்தை இவ்வளவு கமுக்கமாக வைத்திருப்பது ஏன்? என்கிற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது.
தமிழ்த்திரையுலகம் இப்போது கடுமையான ஒரு நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது.அது என்னவெனில்? திரைப்படங்களின் இணைய ஒளிபரப்பு உரிமை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றின் விற்பனை என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது.
பெரிய கதாநாயகர்களின் படங்களின் வியாபாரம் தடுமாற்றத்தில் உள்ளது. அடுத்தநிலையில் உள்ளவர்கள் நிலை அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது.
விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை இன்னும் வியாபாரமாகாமல் இருக்கிறது.அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற அரண்மனை 4, கருடன் போன்ற படங்களுக்கும் எதிர்பார்த்த விலை கிடைக்காமல் குறைந்த விலைக்கே தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனை ஆனது.
இதுபோல் நிறையப் படங்கள் விற்பனை ஆகாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், லப்பர் பந்து படத்தின் இணைய ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றின் வியாபாரம் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறதாம்.
இரண்டு உரிமைகளுக்கும் சேர்த்து சுமார் ஏழு கோடி விலை என்று சொல்லப்படுகிறது.
இப்படத்தின் வியாபாரம் இப்படி நடந்திருப்பதால் இனி படத்தைத் திரையரங்குகளில் வெளியிடும் வேலை வேகம் பிடிக்கும்.படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கும் என்று சொல்கிறார்கள்.
தங்கலான், வணங்கான் போன்ற படங்களே விற்பனையாகாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப்படம் விற்பனை ஆகியிருப்பது திரையுலகில் பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மை.











