September 13, 2026
சினிமா செய்திகள்

சிக்கல் தீர்ந்தது – புறநானூறு படப்பிடிப்பு தொடங்குகிறது

இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமை பெறவில்லை.

இதற்கடுத்து,டான் பட இயக்குநர் சிபிசக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டிருந்தது.

அதற்கு மாறாக சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது.இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம்ரவி,ஸ்ரீலீலா,அதர்வா ஆகியோர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.

இந்தப்படம் இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிகப் பொருட்செலவில் எடுக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் படம் என்று சொல்கிறார்கள்.

இன்னும் படம் தொடங்காத நிலையில் இந்தப்படத்துக்குச் செலவு எனத் திட்டமிடப்பட்டிருக்கும் உத்தேச தொகை சுமார் நூற்று நாற்பது கோடி என்றும் சொல்கிறார்கள்.

இந்தப்படத்தை தற்போது தமிழ்த் திரையுலகில் புதிதாகக் கால்பதித்திருக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம்,இப்போது தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிகடை படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் புறநானூறு படத்தையும் தொடங்கவிருக்கிறது.இந்தப்பட அறிவிப்புக்காக சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி, ஸ்ரீலீலா,அதர்வா ஆகிய நால்வரையும் வைத்து லுக் டெஸ்ட் எனும் புகைப்படப் படப்பிடிப்பு மற்றும் திரைப்பட அறிமுகக் காணொலி ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டார் இயக்குநர் சுதா கொங்கரா.

அதில்,இயக்குநர் சுதா கொங்கராவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அறிமுகக் காணொலி எடுக்கும் திட்டம் தடைபட்டது.

அதன்பின் தயாரிப்புத் தரப்பினர் இருவரிடமும் பேசி சமரசம் ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

அதனால் தடைபட்ட அறிமுகக் காணொலிக்கான படப்பிடிப்பை அடுத்த வாரம் நடத்துவார்கள் என்று சொல்லப்பட்டது.இப்போது அதையும் இரத்து செய்துவிட்டார்களாம்.

மீண்டும் சிக்கலா என்றால்? இல்லை.

எதற்கு அறிமுகக் காணொலியெல்லாம் வெளியிட்டு அறிவிப்பு செய்யவேண்டும்? எதுவுமே சொல்லாமல் நேராகப் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவோம் என்று முடிவெடுத்துவிட்டார்களாம்.

அதன்படி,டிசம்பர் 21 ஆம் தேதி அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

அன்று தொடங்கி சுமார் இருபது நாட்கள் நடக்கவிருக்கும் முதல்கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அனைவருமே கலந்த் கொண்டு நடிக்கவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த முதல்கட்டப் படப்பிடிப்பு முழுக்க சென்னையில் நடைபெறவிருக்கிறது என்றும் அடுத்தடுத்த கட்டங்கள் வெவ்வேறு இடங்களில் நடக்கும் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts