சினிமா செய்திகள்

ராஜமெளலி படத்தில் விஜய் நடிக்கிறார் என்ற செய்தி வெளியானது எப்படி?

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களுக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ‘பாகுபலி’ படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு,கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

மார்ச் 27 ஆம் தேதி இப்படத்தின் நாயகர்களில் ஒருவரான ராம்சரணின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்தப் படத்தில் அவரது தோற்றம் மற்றும் அவரது கதாபாத்திரத்தின் அறிமுகக் காட்சியும் வெளியிடப்பட்டது.

இதற்கிடையே இந்த’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்யிடம் படக்குழுவினர் பேசியிருப்பதாகச் சொல்லப்பட்டது.

இதை விஜய் தரப்பு மறுத்ததாகவும் சொல்லப்பட்டது.

இந்தச்செய்தி எப்படி வெளியானது? என்று விசாரித்தால், இந்தப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமைக்காக சொல்லப்பட்ட விலை 40 கோடியாம்.

இந்த விலை அதிகம் என்று சொல்லி இப்படத்தை வாங்க யாரும் முன்வரவில்லையாம். அப்போதுதான், இந்தப்படத்தில் நடிக்க விஜய்யிடம் கேட்டிருக்கிறோம் அவரும் ஒப்புக்கொள்வார் அதனால் இந்த விலை கொடுத்தாலும் உங்களுக்கு இலாபம் கிடைக்கும் என்று படக்குழு சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

அப்படித்தான் இந்தச்செய்தி வெளியானதாம். விஜய் தரப்பு இந்தச் செய்தியை மறுத்தாலும் ராஜமெளலி படக்குழுவினர் அவர் கண்டிப்பாக நடிப்பார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம்.

என்ன நடக்கிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts