விக்ரம் பற்றிய திடீர் வதந்தியும் விளக்கமும்
நடிகர் விக்ரம் இப்போது, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். லலித்குமார் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
அதோடு, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் நடிக்கிறார்.
இவைதவிர, ‘கோப்ரா’ தயாரிப்பாளர் தயாரிக்கவுள்ள மற்றொரு படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ படங்களை முடித்துவிட்டு நடிப்பை விட்டு விலக விக்ரம் முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின.தன் மகன் துருவ் விக்ரமின் திரையுலக வாழ்க்கையைக் கவனித்துக் கொள்வதற்காக அவர் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்லப்பட்டது.இந்தச் செய்தியைப் பலரும் பகிர்ந்து வந்தார்கள்.
இதற்கு விக்ரம் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விக்ரம் தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், “இது பொய்யான செய்தி. எப்படி யாரிடமும் உறுதிப்படுத்தாமல் இப்படியொரு செய்தி வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இது போன்ற செய்திகளைப் பதிப்பிக்கும் முன் கேட்கவும்.
‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் லலித் குமார் தயாரிக்கவுள்ள மற்றொரு படம் உள்ளிட்ட சில படங்களில் விக்ரம் நடிக்கவுள்ளார். மேலும், சில படங்களில் நடிக்கக் கதைகளும் கேட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.











