சினிமா செய்திகள்

சப்தம் பட வழக்கில் சமரசம் ஆனாலும் ட்ஜிட்டல் ரிலீஸ் இல்லை ஏன்?

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் படம் ஆதி கதாநாயகனாக நடித்த படம் சப்தம்.‘ஈரம்’வெற்றிக்குப் பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

இந்தப் படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க முக்கிய வேடங்களில் சிம்ரன், லைலா,எம்.எஸ்பாஸ்கர், ராஜீவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.அமானுஷ்ய திரில்லர் ஜேனரில் உருவான இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

7ஜி ஃபிலிம்ஸ் சிவா தயாரிப்பில் உருவான இந்தப்படம் 2025 பிப்ரவரி 28 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி,தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப்படம் பிப்ரவரி 28 அன்று வெளியாகிவிட்டது.ஆனால் தமிழ்நாட்டில் படம் வெளியாகவில்லை.

இந்தப்படம் தயாரிப்பதற்காக வாங்கிய கடனை தயாரிப்பாளர் 7ஜி சிவா உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதனால் படம் தயாரிக்கப் பணம் கொடுத்த நிதியாளர் தடையில்லாச் சான்று கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.அதனால் திட்டமிட்டபடி பிப்ரவரி 28 காலை படம் வெளியாகவில்லை.

அதன்பின் படத்தின் நாயகன் ஆதி,இயக்குநர் அறிவழகன் ஆகியோர் பெரும்தொகையைக் கொடுத்து உதவியதால் படம் வெளியானது.

மார்ச் 1 ஆம் தேதி மதியக் காட்சியில் இருந்துதான் படம் திரையிடப்பட்டது. இதனால் இப்படத்துக்கு எதிர்பார்த்த திரையரங்குகள், வசூல் என கிடைக்கவில்லை. மேலும், இந்த தாமதம் படக்குழுவினரை பெரும் சிக்கலுக்கும் ஆளாக்கியது.

அதன்பின் சில் நாட்கள் கழித்து மார்ச் 9 அன்று ‘சப்தம்’ படம் குறித்து பதிவிட்ட இயக்குநர் அறிவழகன், “‘சப்தம்’ படத்தினை தாமதமாக வெளியிட்டு, விளம்பரமின்றி கொன்றார்கள். ஆனால் இரசிகர்கள் அப்படத்தினை கொல்லவில்லை. திரையரங்குகளுக்கு வந்து படம் பார்த்து, தொலைபேசி மூலமாக அனைவரும் பேசி ‘சப்தம்’ படத்துக்கு அன்பை பொழிந்த அனைவருக்கும் நன்றி. அந்த அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும் தயாரிப்பாளர் 7ஜி சிவா மீதுதான் குற்றம் சொல்லியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

அந்தப்படத்தின் தயாரிப்பாளரின் தவறான அணுகுமுறைகளால் ஏற்பட்ட சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன.அப்படத்தின் டிஜிட்டல் வெளியீட்டிலும் சிக்கல் ஏற்பட்டது.

தயாரிப்பாளர் 7ஜி சிவாவுக்குக் கடன் கொடுத்திருந்த புருசோத்தமன் என்பவர் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டு நீதிமன்றத்தை அணுகினார்.அவர் 7ஜி சிவாவுக்கு சுமார் மூன்றே கால் கோடி கடன் கொடுத்திருக்கிறார்.

அந்தப்பணத்தை பட வெளியீட்டுக்கு முன்பு திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று சொன்ன 7ஜி சிவா சொன்னபடி நடந்து கொள்ளாததால் நீதிமன்றம் சென்றார்.

அங்கு, இந்தப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமை பெற்றிருக்கிற ரேவன்சா குளோபல் வென்ச்சர்ஸ் நிறுவனத்திடம் வரவேண்டிய தொகையில் இந்தக் கடனை முதலில் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த வழக்கில், ஜூலை 2 ஆம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இப்படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் எனப்படும் இணைய ஒளிபரப்புக்குத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இதனால் பதறிப்போன ரேவன்சா நிறுவனம் சமரசப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தது.வழக்குத் தொடுத்தவரும் அதற்கு ஒப்புக்கொண்டாராம்.

அதனால், வழக்குத் தொடுத்தவர், தயாரிப்பாளர் 7ஜி சிவா, ரேவன்சா நிறுவனம் ஆகிய மூவரும் பேசியிருக்கிறார்கள்.அப்போது, கொடுக்க வேண்டிய தொகையில் குறிப்பிட்ட அளவைக் குறைத்துக் கொண்டு மீதியை ஆளுக்குப் பாதியாகத் தருவதாக ரேவன்சாவும் 7ஜி சிவாவும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

பணம் கொடுத்த்வர் அதற்குச் சம்மதித்துவிட்டாராம்.

இதை நீதிமன்றத்தில் மூவரும் சொல்லியதன் அடிப்படையில் சப்தம் டிஜிட்டல் ரிலீசுக்கான தடை விலகிவிட்டது.

விரைவில் அந்தப்படம் டிஜிட்டலில் வந்துவிடுமா என்றால்? அதிலும் ஒரு குறை இருக்கிறது.இப்படத்தின் இந்திப் பதிப்புதான் விரைவில் வெளியாகவிருக்கிறது.

தமிழ்ப்பதிப்பின் வியாபாரம் இதுவரை நடக்கவில்லை என்பதால் தமிழில் படம் வெளியாகாது என்கிறார்கள்.

இந்தப்படத்தின் தயாரிப்பாளர் 7ஜி சிவா இதற்கு முன்பு தயாரித்த ருத்ரதாண்டவம் படமும் இணையத்தில் வெளியாகவில்லை இப்போது இந்தப்படமும் வெளியாகாது எனும் நிலை.

மூடநம்பிக்கைகள் நிறைந்த திரையுலகில் இதற்கு தயாரிப்பாளரின் ராசிதான் காரணம் என்கிறார்கள்.

Related Posts