சினிமா செய்திகள்

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு – லைகா தயாரிக்கிறது

2025 பிப்ரவரி 3 ஆம் தேதியன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சிலம்பரசன் மூன்று படங்களின் அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் நடிப்பில் உருவாகவிருக்கும் 49,50,51 ஆகிய படங்களின் அறிவிப்பு வெளியானது.

இவற்றில், எஸ்டிஆர் 49 படத்தை ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.இப்படத்தில் கல்லூரி ஆசிரியராக நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

எஸ்டிஆர் 50 படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநரான தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.

சிம்பு நடிக்கும் 51 ஆவது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.காட் ஆஃப் லவ் என்கிற பெயரிட்டு முதல்பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து எஸ்டிஆர் 49 படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. அந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு நகைச்சுவை வேடங்களில் நடிக்க மறுத்து வந்த சந்தானம், எஸ்டிஆர் 49 படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

விரைவில் எஸ்டிஆர் 49 படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

இந்நிலையில், இம்மூன்று படங்களுக்கு அடுத்து சிம்பு நடிக்கும் இரண்டு படங்கள் உறுதியாகியிருக்கின்றனவாம்.

அவற்றில் ஒரு படத்தை மணிரத்னமும் இன்னொரு படத்தை சுதா கொங்கராவும் இயக்கவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

எழுத்தாளர் நரன் எழுதியுள்ள வேட்டை நாய்கள் நாவலை மையமாக வைத்து ஒரு திரைக்கதையை சுதா கொங்கரா எழுதியிருக்கிறாராம்.அதை சிம்புவிடம் சொல்லியிருக்கிறார் சுதா கொங்கரா.அது அவருக்குப் பிடித்திருக்கிறது.

இப்போது தயாரிப்பில் இருக்கும் மூன்று படங்கள் நிறைவடையும் நேரத்தில் இந்தப்படத்தை அறிவித்துவிடலாம் என்று சிம்பு தரப்பில் சொல்லியிருக்கிறார்களாம்.அந்தப்படத்தை கேஜிஎஃப் படத்தைத் தயாரித்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

அதோடு, மீண்டும் உயிர்த்தெழும் லைகா நிறுவனம் ஐந்து பெரிய படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு வேலைகளைத் தொடங்கியிருக்கிறது. ஐந்து படங்களில் கமல்,ரஜினி ஆகியோர் படங்களும் அடக்கம்.

அந்த ஐந்து படங்களில் ஒன்றில் சிம்பு கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.அந்தப்படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப்படங்கள் தொடர்பான தொடக்கக்கட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கின்றனவாம்.

எஸ்டிஆர் 49,50,51 ஆகிய மூன்று படங்களை முடிக்கவே ஓராண்டுக்கும் மேல் ஆகிவிடும்.அதன்பின் தான் இந்தப்படங்களைத் தொட்ங்கியாக வேண்டும்.அதற்குள் இந்த இயக்குநர்கள் முழுமையான திரைக்கதையுடன் தயாராகிவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

Related Posts