லப்பர் பந்து வெற்றி – இயக்குநருக்குக் கைமேல் கிடைத்த பலன்

கனா, எப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் இணை இயக்குநர் மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்துக்கு வசனம் எழுதியவர் தமிழரசன் பச்சமுத்து. இவர் முதன்முறையாக எழுதி இயக்கிய படம் லப்பர் பந்து.
ஹரிஷ் கல்யாண்,அட்டகத்தி தினேஷ்,சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அந்தப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
முதல்நாளிலிருந்தே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது அப்படம்.வரவேற்பு மட்டுமின்றி வசூலிலும் நிறைவாக இருக்கிறது.படம் வெளியாகி பனிரெண்டு நாட்கள் ஆகிவிட்டன.இப்போதும் பல இடங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படம் திரையரங்குகளில் வெளியாகுமுன்பே இணைய ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியவை விற்பனையாகி தயாரிப்பாளருக்கு நிம்மதி கொடுத்தது.
அடுத்து தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையும் நல்ல தொகைக்கு விற்பனையாகி தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சி கொடுத்தது.
இப்போது இந்தப்படம் தமிழ்நாடு திரையரங்குகளில் இருந்து மட்டும் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களின் பங்காக சுமார் பதினைந்து கோடிக்கு மேல் வரும் என்று சொல்லப்படுகிறது.
இதனால் படத்தின் தயாரிப்பாளர் லட்சுமண்குமார் நாயகன் ஹரீஷ்கல்யாண் உள்ளிட்டோர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கும் பெரும் பாராட்டுகள் கிடைத்துவருகின்றன.
பாராட்டு மட்டுமின்றி இந்த வெற்றிக்கான பலன் கைமேல் கிடைத்திருக்கிறது.
அது என்ன?
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு இப்பட வெளியீட்டுக்கு முன்பே இன்னொரு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டதாம்.
தமிழ்த் திரையுலகுக்குப் புதிதாக அறிமுகமாகியிருக்கும் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனம், லப்பர் பந்து வெளியீட்டுக்கு முன்பே,அடுத்தபடம் எங்களுக்கு இயக்குங்கள் என்று சொல்லி ஒப்பந்தம் போட்டுவிட்டார்களாம்.
அதோடு நல்ல சம்பளமும் பேசி அதில் நான்கில் ஒரு பங்கு பணத்தை முன்பணமாகவும் கொடுத்துவிட்டதாம்.
படம் வெளியாகி பெரிய வெற்றி என்றதும்,அவருடைய அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க தனுஷ் ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.அவருக்காகக் கதை மற்றும் திரைக்கதை எழுதும் வேலைகளில் இறங்கியிருக்கிறாராம் தமிழரசன் பச்சமுத்து.
இந்நிலையில், இளம்நடிகர் துருவ் விக்ரமும் எனக்காக ஒரு கதை எழுதுங்கள் நான் நடிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.
இதனால், தமிழரசன் பச்சமுத்துவின் அடுத்த பட நாயகன் தனுஷ் அல்லது துருவ்விக்ரம் என்பது மட்டும் உறுதி என்கிறார்கள்.
ஒரு புதுமுக இயக்குநரின் இந்த வெற்றிப் பயணம் பல நாளைய இயக்குநர்களுக்கு உந்துசக்தியாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.