சினிமா செய்திகள்

சூர்யா எடுத்த முடிவு – முதலில் இப்படி ஒரு முயற்சியில் இறங்கிய சேரனின் கருத்து

ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’.சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்தப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளீயிட முடிவு செய்து அமேசான் நிறுவனத்துக்கு அதற்கான உரிமை வழங்கப்பட்டுவிட்டது. அதற்கான விலை ஒன்பது கோடி என்கிறார்கள்.

இன்னும் சில நாட்களில் இப்படம் இணையத்தில் வெளீயாகிவிடும் என்று சொல்கிறார்கள்.

இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.திரையரங்குகளை முற்றாக அழிக்கக்கூடிய இந்தச்செயலைச் செய்ததால், சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப்போற்று படம் உட்பட எந்தப்படத்தையும் திரையிடமாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்த இக்கட்டான சூழலில் சூர்யாவின் சுய இலாபத்துக்காகச் செய்திருக்கும் இந்தச்செயல் கடும் கண்டனத்திற்குரியது என்கிறார் தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன்.

ஒருபடத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு அதை எங்கு விற்கவேண்டும் என்கிற உரிமை உள்ளது, அதுமட்டுமின்றி காலச்சூழலுக்கு ஏற்ப நடக்கும் வியாபாரங்களை வரவேற்க வேண்டும் என்று சூர்யாவுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் சதீஷ்குமார்.

2013 ஆம் ஆண்டே திரையரங்குகளில் இல்லாமல் நேரடியாக வீடுகளுக்கே,தன்னுடைய ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை குறுந்தகடுகளாக விநியோகிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் இயக்குநர் சேரன். அந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை.

இப்போது பொன்மகள்வந்தாள் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளீயிடப்படும் சூழலில், இதைப்பற்றி அன்றே பேசியவர் சேரன் என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக சேரன் வெளீயிட்டிருக்கும் பதிவில்,

யார் என்று பேசினாலும் இன்று நடந்தது சந்தோசம்.. ஆனால் இந்த வாய்ப்பு எல்லா திரைப்படங்களுக்கும் கிடைக்கும்போதே அந்த சிந்தனைகள் முழுமையாகிறது.. மீண்டும் இங்கும் ஒருசாரர் மட்டுமே பயன்பெறுவது மாறவேண்டும்….

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Related Posts