சிவகார்த்திகேயன் மகள் பாடகியானார்
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகியுள்ள படம் ‘கனா’. அவரது கல்லூரி நண்பரான அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாளை (ஆகஸ்ட் 23) ’கனா’ படத்தின் இசை மற்றும் குறுமுன்னோட்டம் வெளியிடப்படவுள்ளது.
முழுக்க பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால், இப்படத்தின் இசையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வெளியிடவுள்ளார். மேலும், இயக்குநர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் அனிருத், இமான் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்.
சிவகார்த்திகேயனின் இன்னொரு கல்லூரி நண்பரான திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். இவர் ஏற்கெனவே ‘மரகத நாணயம்’ படத்துக்கு இசையமைத்துள்ளார். மோகன்ராஜன், ஜிகேபி, ராபிட் மேக், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
பி.தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குநராக லால்குடி என்.இளையராஜா பணியாற்றுகிறார்.
சிவகார்த்திகேயனுடன் இணைந்து கலையரசு என்பவர் படத்தைத் தயாரித்து வருகிறார்.
இந்தப்படத்தின் பாடல்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் முதல்பாடலாக இடம்பெற்றிருக்கும் வாயாடி பெத்த புள்ள என்கிற பாடலை சிவகார்த்திகேயனின் ஐந்து வயது மகள் ஆராதனா, சிவகார்த்திகேயன், வைக்கம் விஜயலட்சுமி ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.











