சினிமா செய்திகள்

தனுஷின் வடசென்னை பட அறிவிப்புக்குக் காரணம் ரஜினியின் காலா, எப்படி?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் வடசென்னை படத்தின் முதல் பாகத்தின் முன்னோட்டம் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பு நேற்று (ஜூன் 14) மாலை வெளியானது. படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னோட்டம் வெளியாக சுமார் ஒன்றரை மாதங்கள் இருக்கும்போது இப்போதே அதுபற்றிய அறிவிப்பு வெளியானதற்குக் காரணம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

என்ன காரணம்?

வடசென்னை படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கிறது. லைகா நிறுவனம் வெளியிடவிருக்கிறது.

இதேபோலத்தான் ரஜினியின் காலா படத்தையும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்தது. லைகா நிறுவனம் வெளியிட்டது.

அப்படத்திற்கு விநியோகஸ்தர்களிடம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டிய நிலையில் இப்போது இருக்கிறார்கள்.

சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்கள் பணத்தை உடனே கொடுங்கள் என்று நெருக்கடி கொடுக்காமல் இருப்பதற்காகவே வடசென்னை படம் பற்றிய அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது என்கிறார்கள்.

வடசென்னை படத்தை காலா விநியோகஸ்தர்களுக்கே தரப்போவதாகவும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

இதனால் சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்கள் காலாவுக்காகக் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுக்கமாட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

Related Posts