சினிமா செய்திகள்

கபிலனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்த சார்பட்டா பரம்பரை முதல்பார்வை

2018 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான காலா படத்துக்கு அடுத்து இயக்குநர் பா.இரஞ்சித் எழுதி இயக்கியிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை.

முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். இது அவருக்கு முப்பதாவது படம்.

இந்தப்படத்தை கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப்படத்தின் பெயரும் முதல்பார்வையும் இன்று காலை 11 மணிக்கு வெளியானது.

sarpatta parambarai

sarpatta parambarai

இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல,,இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா

என்கிற முன்னுரையுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்த முதல்பார்வை மூலம் ஆர்யா, குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார் என்பதும் படத்தில் அவர் பெயர் கபிலன் என்பதும் தெரிகிறது.

வெளியானது முதல் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது இந்த முதல்பார்வை.

பா.இரஞ்சித்தின் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி,காலா ஆகிய நான்கு படங்களைப் போலவே இந்தப்படத்திலும் இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன் பாடலாசிரியர் கபிலன் ஆகியோர் கூட்டணி அமைந்துள்ளது.

இம்மூவர் கூட்டணியில் உருவான எல்லாப்பாடல்களுமே வெற்றிப் பாடல்கள்.

அதுபோலவே இந்தப்படத்தின் பாடல்களும் அமைந்துள்ளனவாம்.

கொரோனா காலத்தில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளாமலே பாடல்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

அதன்பின் அப்பாடல் காட்சி படப்பிடிப்பு சென்னை மாங்காட்டில் நடந்தபோது இயக்குநரின் அழைப்பின் பேரில் பாடலாசிரியர் கபிலன் நேரில் சென்று பார்த்துள்ளார்.

அது குறித்து அவர் கூறியதாவது….

பாடல் எழுதும் நேரத்தில் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவில்லை என்பதால் அப்பாடல் காட்சி படப்பிடிப்பு நடக்கும் போது அங்கே போயிருந்தேன்.

பாடல் படமாக்கப்பட்ட விதம் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது. எங்கள் முந்தைய பாடல்களைக் காட்டிலும் இந்தப்பாடல் பெரிய வரவேற்பைப் பெறும்.அவ்வளவு கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது என்கிறார் பாடலாசிரியர் கபிலன்.

அதோடு இந்தப்படத்தில் நாயகன் பெயர் கபிலன் என்று அறிவிப்பு வந்திருப்பது அவருக்கே ஆச்சரியம்.

அருமையான பாடல் வரவிருக்கிறது என்கிற மகிழ்வோடு படத்தில் நாயகன் பெயரும் கபிலன் என்றிருப்பது அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

Related Posts