ராகவா லாரன்சின் 25 ஆவது படம் இதுதான் – புதிய தகவல்
நடிகர் ராகவா லாரன்ஸின் 25ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் 14,2024 அன்று வெளியானது.
அதில்,
’ராக்ஷசுடு’, ‘கிலாடி’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர், கல்வியாளர் மற்றும் கேஎல் பல்கலைக்கழகத்தின் தலைவர் கோனேரு சத்யநாராயணா, தற்போது ஏ ஸ்டுடியோஸ் எல்எல்பி பேனரின் கீழ் பல நல்ல படங்கள் தயாரிப்பதில் பிஸியாக இருக்கிறார். இந்த மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனம் நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஹவ்விஷ் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ஒரு புதிய படத்தை இன்று அறிவித்துள்ளனர்.
’மிகப்பெரிய ஆக்ஷன் அட்வென்ச்சர் ஆரம்பம்’ என்ற உற்சாக செய்தியுடன் படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனம் முன்பு தயாரித்த ‘ராக்ஷசுடு’ மற்றும் ’கிலாடியை’ இயக்கிய ரமேஷ் வர்மா இந்தப் படத்தையும் இயக்குகிறார். தயாரிப்பாளர் கோனேரு சத்யநாராயணா மற்றும் ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இதுவாகும்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். நடன இயக்குநராக இருந்து கதாநாயகனான ராகவா லாரன்ஸின் 25 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல தயாரிப்பாளர் கோனேரு சத்யநாராயணா இப்படத்தை தயாரிக்கிறார். பான் இந்திய படமாக வெளியாகும் இந்தப் படத்தின் அறிவிப்பு போஸ்டரில் நடிகர் ராகவா லாரன்ஸின் நிழல் உருவம் இடம்பெற்றுள்ளது. இந்த படம் குறித்தான மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். படப்பிடிப்பு நவம்பர் 2024 முதல் தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியில் வெளியான கில் படத்தின் அதிகாரப்பூர்வ மொழிமாற்றுதான் இந்தப்படம்.
இந்தப்படத்தைத் தமிழில் எடுக்க பல கதாநாயகர்கள் விருப்பப்பட்டனர். ஆனால் அவர்கள் எல்லாம் பொறாமை கொள்ளும் வகையில் இந்தப்படம் ராகவா லாரன்சுக்குக் கிடைத்துவிட்டது.
அதனால், தான் இயக்கி நடிக்க வேண்டிய காஞ்சனா 4 படத்தைத் தள்ளி வைத்துவிட்டு இந்தப்படத்தில் நடிக்கத் தேதிகள் கொடுத்துவிட்டாராம்.
ராகவா லாரன்சுக்காக தமிழ்த்திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து அதற்கேற்ப கதாநாயகி மற்றும் பல காதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.











