ஏ.ஆர்.ரகுமானைப் பிரிந்தார் மனைவி – தனித்தனியே அறிவிப்பு
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.இது தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது…
பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர்.ரகுமானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளார். அவர்களுடைய உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்வு ரீதியான அழுத்தத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒருவர் மீது ஒருவர் அவர்கள் ஆழமான அன்பை வைத்திருந்தாலும், பதட்டங்களும் சிரமங்களும் தங்களுக்கு இடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நேரத்தில் எந்தத் தரப்பினரும் இந்த விரிசலைச் சரிசெய்ய இயலாது. வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக சாய்ரா தெரிவித்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாயத்தைக் கடக்கும் இந்த நேரத்தில், சாய்ரா தன்னுடைய பிரைவசியை மதிக்குமாறு பொதுமக்களிடம் கோருகிறார்
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது…
மிகப்பெரிய 30 ஆம் ஆண்டுக்குள் நுழைவதை எதிர்பார்த்திருந்தோம். ஆனால் எல்லா விசயங்களும் ஒரு எதிர்பாராத முடிவை சுமந்திருக்கின்றன. உடைந்த இதயங்களின் எடையால் இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும். எனினும் இந்தச் சிதறலில், உடைந்த துண்டுகள் தங்களுடைய இடத்தை மீண்டும் கண்டடையாமல் போனாலும், நாங்கள் அர்த்தத்தை தேடுகிறோம். எங்களுடைய நண்பர்களே நாங்கள் இந்த பலவீனமான அத்தியாயத்தைக் கடக்கும் போது உங்களுடைய கனிவுக்கும், எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மதிப்பதற்கும் நன்றி
இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு ஆகியோர் திருமணம் 1995 ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானுவின் இந்த விவாகரத்து முடிவு இரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.










