23 கோடி கொடுக்கும் தனுஷ் – சிக்கல் தீர்ந்ததின் பின்னணி

நடிகர் தனுஷ், தேனான்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கும் ஃபைவ் ஸ்டார் கதிரேசனுக்கும் படம் நடிக்க ஒப்புக்கொண்டு அதைப் பல காலமாக நிறைவேற்றவில்லை.
இதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த முன் முயற்சி காரணமாக திரையுலக அமைப்புகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.
அதில், தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுக் கொண்டு படம் நடிக்காத தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
அதன்விளைவாக தனுஷ் சிக்கலில் ஒரு சுமுக முடிவு எட்டப்பட்டிருக்கிறது.
இது நடிகர் தனுஷ் நடிகர் சங்கத்துக்கு அனுப்பிய கடிதம் மூலம் உறுதியாகியிருக்கிறது.
12.09.2024 தேதியிட்ட அக்கடிதத்தில் தனுஷ் கூறியிருப்பதாவது….
எனது தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் திரு.முரளி அவர்கள்,ஃபைவ் ஸ்டார் கிரியேசன்ஸ் திரு. கதிரேசன் அவர்கள் எழுப்பிய புகார்களை தீர்க்க உதவிய நம் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.உங்கள் சரியான தலையீடு மற்றும் நேர்மையான வழிகாட்டுதல் எங்களை நோக்கிய சவால்களை சமாளிக்கவும் பரஸ்பர் நன்மை பயக்கும் உடன்பாட்டை அடையவும் எங்களுக்கு உதவியது.
சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும் ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதில் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளை நான் குறிப்பாக அங்கீகரிக்க விரும்புகிறேன்.
உங்கள் முயற்சிக்கு என் ஆழ்ந்த நன்றிகள்.தங்கள் உதவி பொருட்டு 11.09.2024 அன்று எங்கள் படப்பிடிப்பை மீண்டும் நல்லவிதமாக தொடங்க முடிந்தது.தங்களின் அசைக்க முடியாத் ஆதரவுக்காக திரு.நாசர் அவர்கள் திரு.கார்த்தி திரு.விஷால் திரு.கருணாஸ் மற்றும் திரு.பூச்சிமுருகன் ஆகியோருக்கு நான் சிறப்பு நன்றியினை தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த பிரச்சினைகளை தீர்ப்பது எங்களுக்கு உதவியது மட்டுமல்லாமல் தொழில்துறைக்கு ஒரு நேர்மறையான முன்னுதாரணத்தையும் அமைத்துள்ளது.நம் நடிகர் சங்கம் முயற்சித்து வரும் பல சிறந்த திட்டங்களுக்கும் முன்னெடுப்புகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தனுஷ் கூறியிருந்தார்.
நடிகர் சங்கம் எடுத்த முயற்சியின் விளைவாக நடந்த உடன்பாடு என்ன?
தேனாண்டாள் முரளிக்கு ரூபாய் பதினைந்து கோடியும் ஃபைவ் ஸ்டார் கதிரேசனுக்கு ரூபாய் எட்டு கோடியும் தருவதாக தனுஷ் ஒப்புக்கொண்டாராம். அதை அவர்களும் ஏற்றுக்கொண்டார்களாம்.
அந்தப்பணத்தை எவ்வாறு கொடுப்பது என்கிற வழிமுறை பற்றிய கேள்வி வந்தபோது தனுஷ் கூறிய யோசனையை அனைவரும் ஏற்றுக்கொண்டனராம்.
இதனால் பல வருடங்களாக நீடித்து வந்த சிக்கல் முடிவுக்கு வந்திருக்கிறது.
வழிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.