சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் படப்பிடிப்புக்கு திடீர்தடை – விவரங்கள்

சோனி நிறுவனம் முதலீடு செய்ய கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனவரி 15,2022 அன்று வெளியானது.

ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாராகவிருக்கும் அந்தப்படத்தில், நாயகியாக சாய்பல்லவி நடிக்கவிருக்கிறார்.

இந்தப்படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடக்கத்தில் காஷ்மீரில் தொடங்கியது.

சுமார் 57 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது எனத் திட்டமிட்டு படக்குழுவினர் அங்கு சென்றனர்.

ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்தாமல் படக்குழு இரண்டு நாட்களுக்கு முன் சென்னை திரும்பிவிட்டது.

காரணம் என்ன?

இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்த இடங்களில் திடீரென தீவிரவாத தாக்குதல் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

அதனால், அந்தப்பகுதி முழுக்க இராணுவம் பொறுப்பெடுத்துக்கொண்டதாம்.

அதோடு அந்தப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுவிட்டதாம்.

இதனால் இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தவியலா நிலை.

திகைத்துப்போன படக்குழு, உரிய அதிகாரிகளிடம் என்ன செயவதெனக் கேட்டிருக்கிறார்கள்.

அவர்கள், இங்கு அடிக்கடி இப்படி நடக்கும். சில நாட்களில் நிலைமை சீராகிவிடும். அதனால் நீங்கள் ஜூன் முதல்வாரம் படப்பிடிப்பு நடத்தலாம். அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்களாம்.

அதனால், பாதிக்கு மேற்பட்ட படப்பிடிப்பு சாதனங்களை அங்கேயே விட்டுவிட்டு சென்னை திரும்பிவிட்டதாம் படக்குழு.

எதிர்பாராத இந்தத் தடங்கலால் பரிதவித்துப் போயிருக்கிறது படக்குழு

Related Posts