சினிமா செய்திகள்

இயக்குநர் முத்தையாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சசிகுமார் – விவரம்

இயக்குநர் முத்தையா இப்போது இரண்டு படங்களை முடித்து வைத்திருக்கிறார்.அருள்நிதி நடிப்பில் அவர் இயக்கியிருக்கும் படமும் அவர் மகனை கதாநாயகனாக வைத்தே அவர் இயக்கியிருக்கும் சுள்ளான்சேது என்கிற படமும் தயாராக இருக்கிறது.

இவற்றில் அருள்நிதி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.அந்நிறுவனம் இப்படத்தை நேரடியாக தொலைக்காட்சியிலும் இணையதளத்திலும் ஒளிபரப்பத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இவ்விரு படங்களின் வேலைகளும் நிறைவடைந்துவிட்டதால் அடுத்த படம் நோக்கிச் செல்லத் தொடங்கியிருக்கிறார் முத்தையா.

சூர்யா,கார்த்தி, விஷால் உட்பட அவருடன் இணைந்து பணிபுரியத் தயாராக இருக்கும் கதாநாயகர்கள் எல்லோரும் வெவ்வேறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முத்தையாவின் முதல்படம் குட்டிப்புலி.2013 ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில் நாயகனாக நடித்திருந்தவர் சசிகுமார்.அவருடன் இணைந்து அடுத்த படம் செய்யலாம் என்கிற எண்ணத்துடன், தன்னுடைய முதல்பட நாயகனான சசிகுமாரை அணுகியிருக்கிறார் முத்தையா.

சசிகுமார் சந்தோசமாக ஒப்புக்கொள்வார் என்று நினைத்தவருக்கு அதிர்ச்சி.முத்தையாவின் கதையில் நடிக்க சசிகுமாருக்கு உடன்பாடில்லை.கத்தி,இரத்தம்,சண்டை என வன்முறையை அடிப்படையாகக் கொண்ட முத்தையா வகைப் படங்களே வேண்டாம் என்று சசிகுமார் நினைக்கிறாராம்.அவருடைய நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்ற அயோத்தி, டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற கதைகளில் நடிப்பதையே விரும்புகிறாராம்.நல்ல கருத்துகள் சென்று சேர்வதுடன் மக்கள் மகிழ்ச்சியாகக் குடும்பத்துடன் படம் பார்க்க வருகிறார்கள் என்பதால் இந்த முடிவை சசிகுமார் எடுத்திருக்கிறாராம்.

இதை வெளிப்படையாக முத்தையாவிடம் சொல்லிவிட்டாராம் சசிகுமார்.

இதனால், இப்போது சசிகுமார் விரும்பும் வகையிலான கதையைத் தேடும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் முத்தையா.தாமே ஒரு மென்மையான கதையை உருவாக்குவது அல்லது வெளியிலிருந்து கதை வாங்கி அதற்குத் திரைக்கதை அமைத்து இயக்குவது என்று முடிவெடுத்து அந்த வேலைகளில் இறங்கியிருக்கிறாராம் முத்தையா.

அவருடைய இந்த முயற்சிக்கு தயாரிப்பாளர்கள் தரப்பிலும் வரவேற்பு இருக்கிறது என்கிறார்கள்.இதனால் கதை தேடும் முயற்சியை வேகப்படுத்தியிருக்கிறார் என்றும் ஒரு கதை கிடைத்துவிட்டது அதை சசிகுமாரிடம் சொல்லி சம்மதம் பெற்றுவிட்டால் அதற்குத் திரைக்கதை அமைத்துவிடுவார் என்றும் சொல்கிறார்கள்.

எது எப்படியிருப்பினும்,குட்டிப்புலி படத்துக்குப் பிறகு சசிகுமார் முத்தையா ஆகியோர் இணையும் படம் உருவாவது இப்போது உறுதியாகியிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

நடக்கட்டும் நடக்கட்டும் நல்லபடியாக நடக்கட்டும்.

Related Posts