மணிரத்னம் விஜய்சேதுபதி பட படப்பிடிப்பு நாளை தொடக்கம் – புதிய தகவல்
மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.இந்தப்படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்கவிருக்கிறார்.
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமே இந்தப்படத்தைத் தயாரிக்கிறது என இப்போது சொல்லப்படுகிறது.அதேநேரம், இப்படத்தின் தயாரிப்புப் பொறுப்பை லைகா நிறுவனம் ஏற்கவிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.அதுதொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் சொல்கிறார்கள்.
இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.அவருடைய இசையில் படத்துக்குத் தேவையான பாடல்பதிவு வேலைகள் நடந்து,இரண்டு பாடல்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன என்றும் சொல்கிறார்கள்.அதுமட்டுமில்லை,இன்றைக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் பாடல் உரிமை விற்பனையும் நடந்து முடிந்துவிட்டதாம்.பாடல் உரிமை 15 கோடிக்கு விற்பனை ஆகியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.அதேநேரம் பதினைந்து இல்லை எட்டுகோடி என்றும் ஒரு தகவல் இருக்கிறது.இரண்டில் எது சரி? என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.
படப்பிடிப்பு தொடங்குமுன்பே இப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பின்னரான இணைய ஒளிபரப்பு உரிமை மற்றும் வெளிநாட்டு விநியோக உரிமை ஆகியனவற்றின் விற்பனை முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
இப்படத்தின் இணைய வெளியீட்டு உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது என்றும் அதற்கான விலை சுமார் இருபது கோடி என்றும் சொல்லப்படுகிறது.
அதேபோல்,இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை சஞ்சய் வாத்வா பெற்றிருக்கிறார் என்றும் அதற்கான விலை சுமார் எட்டுகோடி என்றும் சொல்லப்படுகிறது.அவரே வெளியிடுவாரா? அல்லது வேறு யாருக்கேனும் கூடுதல் விலைக்கு விற்பாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.
இப்போதெல்லாம் பெரிய கதாநாயகர்கள் என்று சொல்லப்படுகிற பலரின் படங்கள் வெளியான பின்புகூட விற்பனை ஆகாமல் இருக்கின்றன.இப்படியிருக்கும்போது விஜய்சேதுபதி மணிரத்னம் இணையும் படத்தின் வியாபாரம் படம் தொடங்கும் முன்பே நடந்திருக்கிறது.
இந்நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 5 ஆம் தேதி தொடங்கும் என்று சொல்லப்பட்டது.ஆனால்,அப்போது திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை.
அதற்குக் காரணம்,இந்தப்படத்தின் படப்பிடிப்பு வட இந்தியாவில் தொடங்கவிருந்தது.படப்பிடிப்புக்கான அனுமதிகளைப் பெற காலதாமதம் ஏற்பட்டதே என்று சொல்லப்படுகிறது.
அவை எல்லாம் நிறைவடைந்து இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்கவிருக்கிறது.கல்கத்தாவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.அங்கு இம்மாதம் இறுதிவரை அதாவது சுமார் பத்துநாட்கள் நடக்கவிருக்கிறதாம்.அதைத்தொடர்ந்து,அங்கிருந்து கிளம்பி வந்து புதுச்சேரியில் படப்பிடிப்பைத் தொடரவிருக்கிறார்களாம்.
அடுத்தடுத்த படப்பிடிப்புத் திட்டங்களுடன் களமிறங்கியிருக்கும் மணிரத்னம் வெகுவிரைவில் இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிடுவார் என்று சொல்கிறார்கள்.
நடக்கட்டும்.











