சூரரைப் போற்று ரிலீஸ் தேதி உறுதியானது
சூர்யாவின் அடுத்த வெளியீடு இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் சூரரைப் போற்று.
சூர்யாவின் 38 ஆவது படமாகத் தயாராகியிருக்கும் இப்படத்தின் பூசை 2019 ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்தது. படப்பிடிப்பு 2019 ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.
இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினர் மற்றும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்கா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார்.
இப்படத்துக்கு இசை ஜீ.வி.பிரகாஷ். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குநராக ஜாக்கி பணியாற்றுகிறார். படத்தொகுப்பிற்கு சதீஷ் சூர்யாவும், உடைகளுக்கு பூர்ணிமா ராமசாமியும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
இப்படம் 2029 கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தேதியில் வெளியிடாமல் 2020 கோடைவிடுமுறையில் படம் வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
கோடை விடுமுறை என்று பொதுவாகச் சொல்லியிருக்கிறார்கள். தேதி சொல்லவில்லை. ஆனால் விநியோகஸ்தர்கள் மத்தியில் ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியாகும் என்கிற பேச்சு இருந்தது.
ஆனால் இப்போது விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகும் ஏப்ரல் 9 ஆம் தேதியே இந்தப்படத்தையும் வெளியிட முடிவு செய்துவிட்டார்களாம்.
அதையொட்டி படத்தின் வியாபார விசயங்கள் வேகமாக நடந்து வருகிறது என்கிறார்கள்.











