பிக்பாஸ் புகழ் நடிகைக்கு திருமணம் உறுதியானது
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும்புகழ் பெற்ற சுஜாவருணி பிளஸ்2 என்ற படத்தில் நாயகியாக நடித்து திரையுலகுக்கு அறிமுகமானவர்.
பென்சில், கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆண் தேவதை உள்பட பல படங்களில் கவர்ச்சி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.
இவருக்கும், ‘சிங்கக்குட்டி’ உட்பட சில படங்களில் கதாநாயகனாக நடித்த சிவாஜிதேவு என்கிற சிவகுமாருக்கும் காதல் இருந்து வந்தது.
சுஜா வருணி சிவகுமார் திருமணம் அடுத்த மாதம் (நவம்பர்) 19 ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடக்கவிருக்கிறது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது.
முன்னதாக கடந்த வாரம் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
காதல் திருமணம் செய்து கொள்வது பற்றி நடிகை சுஜா வருணி ஊடகங்களிடம் கூறியிருப்பதாவது….
நானும், அவரும் 12 வருடங்களுக்கு முன்பு சந்தித்தோம். முதலில் நட்பாகப் பழக ஆரம்பித்த நாங்கள் பின்னர் காதலர்களாக மாறினோம். இருவரும் 12 வருடங்களாக காதலித்து வந்தோம்.
எங்கள் காதலுக்கு பெற்றோர்கள் சமீபத்தில்தான் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து எங்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்குப் பின் நடிப்பேனா? மாட்டேனா? என்ற கேள்விக்கே அவசியம் இல்லை.
நான் தொடர்ந்து நடிப்பேன். நான் தொடர்ந்து நடிப்பதற்கு என் கணவர் அனுமதி கொடுத்து இருக்கிறார்
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.











