லத்தி பட அறிவிப்பு – விஷால் நந்தா ரமணா மீது இயக்குநர்கள் கோபம்
விஷாலின் 32 ஆவது படம் லத்தி. இதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார்.சுனைனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர்ராஜா.
இப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 22 ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு வெளியானது.
இந்த அறிவிப்பு விஷாலின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
ஆனால், இந்தத் தகவல் படத்தின் இயக்குநர் வினோத்குமாருக்கே தெரியாமல் வெளியானதாகச் சொல்லப்படுகிறது.அவரிடம் வெளியீட்டுத்தேதி பற்றிக் கலந்தாலோசிக்காமலேயே தேதியை அறிவித்துவிட்டார்களாம்.
சமூகவலைதளங்களில் பார்த்துத்தான் அவர் இந்தத் தகவலை அறிந்துகொண்டாராம். அதோடு மிகவும் பதட்டமும் ஆகிவிட்டாராம். தனக்குத் தெரியாமல் வெளியீட்டுத் தேதியை அறிவித்ததுகூட அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லையாம். ஆனால் இன்னும் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருக்கிறது என்பதால் பதட்டமாகியிருக்கிறார். அதற்கான தேதிகளைக் கூடச் சொல்லாமல் மார்க் ஆண்டனி என்கிற படத்தில் நடிக்கப் போய்விட்டாராம் விஷால்.
இன்னும் படப்பிடிப்பே முழுமைபெறாத நிலையில் வெளியீட்டுத் தேதியை அறிவித்ததால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
அதோடு, படவெளியீட்டுத் தேதி குறித்த அந்த அறிவிப்பை அவருடைய சமூகவலைதளப்பக்கங்களில் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஷால் மற்றும் இப்படத்தின் தயாரிப்பாளர்களான நந்தா மற்றும் ரமணா ஆகியோரின் இந்தச் செயல் இயக்குநர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறதென்கிறார்கள்.












