சினிமா செய்திகள்

ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியிட முடியாது – ஏன்?

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’.கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் ‘ஜகமே தந்திரம்’ படத்தைத் தயாரித்திருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதனிடையே இந்தப் படம் நேரடியாக இணைய தளத்தில் வெளியாகப்போவதாக அவ்வப்போது செய்தி வரும். அதைப் படக்குழுவினர் மறுத்துவந்தனர்.

இந்நிலையில் அந்தப்படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிடவே இயலாது என்று சொல்கின்றனர். அதற்குக் காரணம் இருக்கிறதாம்.

இலண்டனிலேயே பெரும்பகுதிப் படப்பிடிப்பு மற்றும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவுடன் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.அதனால் அதிகச் செலவு ஆகியுள்ளதாம். பெரும்பகுதிப் படப்பிடிப்பு அங்கு நடத்தப்பட்டதால், இப்படத்துக்கு அந்நாட்டின் நிதியுதவி கிடைக்குமாம்.

அதைப் பெற வேண்டுமானால் இப்படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டுமாம். அதனால் இப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்கிறார்கள்.

Related Posts