சினிமா செய்திகள்

தமிழர்களை இழிவுபடுத்துகிறதா அல்லுஅர்ஜுன் படம் – முதல்பார்வையால் சர்ச்சை

தெலுங்குத் திரையுலகில் பிரபல இயக்குநரான சுகுமார், நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஆர்யா மற்றும் ஆர்யா 2 ஆகிய இரு வெற்றிப் படங்களை இயக்கியவர். நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் இணையும் மூன்றாவது படம் “புஷ்பா”.இப்படத்தின் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கின்றார்.

ஶ்ரீமந்துடு, ஜனதா கேரஜ், ரங்கஸ்தலம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் சார்பாக நவீன், ரவி ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது.

இசையமைப்பாளர் டி.எஸ்.பி இப்படத்திற்கு இசையமைக்கிறார். இவர் அல்லு அர்ஜுன் – சுகுமார் கூட்டணியில் உருவான ஆர்யா மற்றும் ஆர்யா 2 படத்திற்கு இசையமைத்தவர்.

போலாந்து நாட்டை சேர்ந்த கியுபா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான நேற்று அவர் நடிக்கும் “புஷ்பா” படத்தின் முதல் பார்வை வெளியானது.

அதில், செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு அல்லுஅர்ஜூன் உட்கார்ந்திருக்கிறார். இதன்மூலம் செம்மரக்கட்டை கடத்தல் இந்தப்படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உணர முடிகிறது.

அதனால் சர்ச்சையும் உருவாகியிருக்கிறது. ஏனெனில் செம்மரக்கட்டை கடத்தல் என்று காரணம் சொல்லி ஏராளமான தமிழர்களை ஆந்திர காவல்துறை சுட்டுக் கொன்றிருக்கிறது.ஏராளமான பொய் வழக்குகள் போடப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இப்போது ஒரு தெலுங்கு நடிகர் செம்மரக்கட்டை சம்பந்தப்பட்ட படத்தில் நடிப்பதன் மூலம் அது தெலுங்கர்களுக்கு ஆதரவாக இருக்குமா? தமிழர்களுக்கு ஆதரவாக இருக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தெலுங்கர்களுக்கு ஆதரவாக இருந்தால் தமிழிலும் வெளியிடத் துணிவார்களா? என்றும் தமிழ் மக்களுக்கு ஆதரவாகப் பேசியிருந்தால் ஆந்திராவில் ஏற்றுக் கொள்வர்களா? என்றும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

Related Posts