நடிகை மனோரமா மகன் தற்கொலை முயற்சி?
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர் தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகை மனோரமா. 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மனோரமா மறைந்தார். இவரது ஒரே மகன் பூபதி (64). அவரை நடிகராக்க மனோரமா எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.
விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அறிமுகமான பூபதி அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். பெரிதாக வளரமுடியவில்லை.
இந்நிலையில் அவரை மதுப்பழக்கம் ஆட்கொண்டது. மனோரமாவின் மறைவுக்குப் பிறகு தி.நகர் நீலகண்ட மேத்தா தெருவில் பூபதி வசித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டதால் மது யாருக்கும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஏப்ரல் 6 ஆம் தேதி இரவு பூபதிக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. உறவினர்கள் சிகிச்சைக்காக ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த தகவல் அறிந்த மாம்பலம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.அவர்கள் நடத்திய விசாரணையில், பூபதி மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், மது கிடைக்காததால் 6 ஆம் தேதி இரவு தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளதும் அதனால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை. மது கிடைக்காமல் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்த பூபதி, இரவு தூங்க வேண்டும் என்பதற்காக அதிக அளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.இன்னொரு பக்கம் அவர் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து அதிகாரப் பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.











