October 19, 2026
சினிமா செய்திகள்

திரையரங்குகளில் இலாபம் ஈட்டும் ஸ்டார் – கவின் மகிழ்ச்சி

கவின் கதாநாயகனாகவும் அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நாயகிகளாகவும் நடித்த படம் ஸ்டார். பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கிய இந்தப்படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டரடெயிண்மெண்ட் மற்றும் எஸ்விசிசி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன்.

இப்படம் மே 10 ஆம் தேதி வெளியானது.

இப்படத்தைத் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கோவை சுப்பையா பெற்றிருந்தார்.

இப்படத்தை மினிமம் கியாரண்டி அடிப்படையில் சுமார் ஆறரை கோடி கொடுத்து வாங்கினாராம். அதோடு பிரிண்ட் அண்ட் ப்ப்ளிசிட்டிக்கு சுமார் ஒரு கோடியே இருபது இலட்சம் செலவானதாம்.

ஆக மொத்தம் ஏழு கோடியே எண்பது இலட்சம் முதலீடு செய்திருக்கிறார்.

இது பெரிய தொகை இதை அவரால் திரும்ப எடுக்க முடியுமா? என்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது.

ஆனால், படம் வெளியான முதல்நாளிலிருந்தே நல்ல வசூலும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.

இப்படம் வெளியான முதல் நான்கு நாட்களில் அதாவது வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நான்கு நாட்களில் சுமார் பதினொரு கோடி வசூல் செய்திருக்கிறது.

அதன்பின்னும் படம் பல்திரைக் கூடங்களில் மிகவும் நன்றாகவும் தனித் திரையரங்குகளில் நன்றாகவும் போய்க்கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் கோவை சுப்பையா முதலீடு செய்த தொகை அவருக்குக் கிடைத்துவிடும் என்றும் அதற்குப் பிறகு வரும் வசூல் அனைத்தும் இலாபக் கணக்கில் சேரும் என்றும் சொல்கிறார்கள்.

படத்தின் தயாரிப்புச் செலவு திட்டமிட்டதைவிட அதிகமாகிவிட்ட வருத்தத்தில் இருந்த தயாரிப்பு நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டோமோ என்று அச்சத்தில் இருந்த விநியோக நிறுவனம் ஆகிய இரு தரப்புமே மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.

கவின் நடிப்பில் உருவான லிஃப்ட் படம் நேரடியாக இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்கடுத்து அவர் நடிப்பில் வெளியான டாடா படம் திரையரங்குகளில் வெளியாகி அதன் தயாரிப்பாளருக்கு நல்ல இலாபம் கொடுத்தது.

இப்போது வெளியான ஸ்டார் படமும் திரையரங்குகளில் வெளியாகி இலாபம் ஈட்டத் தொடங்கியிருப்பதால் நாயகன் கவின் மற்றும் அவரைச் சார்ந்தோரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் என்கிறார்கள்.

Related Posts