September 7, 2024
சினிமா செய்திகள்

ஏவிஎம் தயாரிக்கும் புதியபடம் – திரையுலகம் வியப்பு

ஈரம், வல்லினம், குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகன், இப்போது ஆதி கதாநாயகனாக நடித்திருக்கும் சபதம் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

அப்படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன என்றும் விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அடுத்து ஒரு படம் இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

அந்தப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

ஏற்கெனவே ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் தமிழ்ராக்கர்ஸ் என்கிற இணையத்தொடரை இயக்கியிருந்தார் அறிவழகன்.

எல்லாவற்றையும் முறையாகத் திட்டமிட்டுப் பணிபுரிவதற்குப் பெயர் போனது ஏவிஎம் நிறுவனம்.எந்தப்படத்தையும் திட்டமிட்டபடி முடிக்காதவர் என்று பெயர் வாங்கியவர் அறிவழகன்.

இப்படிப்பட்ட இருவர் இணைந்தால் சரியாக வருமா? என்று பரவலாகப் பேசப்பட்டது.

அதைத்தாண்டித்தான் தமிழ் ராக்கர்ஸ் வெளியானது.

அப்போது ஏற்பட்ட உறவு நல்லமுறையில் நீடிப்பதால் அடுத்தும் அவரை வைத்துப் படமெடுக்க ஏவிஎம் நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.

இது அறிவழகன் பற்றிக் குறை கூறியவர்களுக்குப் பேரிடி என்கிறார்கள்.

அறிவழகன் இயக்கும் அந்தப் புதிய படத்தில் நாயகனாக நடிக்க அருண்விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஏற்கெனவே அறிவழகன் இயக்கத்தில் குற்றம் 23, பார்டர் ஆகிய இரண்டு படங்களிலும் தமிழ்ராக்கர்ஸ் இணையத் தொடரிலும் அருண்விஜய் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இவற்றில், பார்டர் படம் இன்னும் வெளியாகவில்லை.
தமிழ்ராக்கர்ஸ் இணையத் தொடரைத் தயாரித்தது ஏவிஎம் நிறுவனம் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில்தான் நான்காவது முறையாக அறிவழகன் அருண்விஜய் கூட்டணி ஏற்பட்டுள்ளது.

பாலா இயக்கத்தில் வணங்கான், திருக்குமரன் இயக்கும் ரெட்ட தல ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருப்பதன் மூலம் வலிமையாக இருக்கிறார.

இந்நிலையில், அருண்விஜய் அடுத்து வெற்றிக்கூட்டணியான அறிவழகன் மற்றும் ஏவிஎம் ஆகியோருடன் இணைந்திருக்கிறார்.

குற்றம் 23 படம் வெற்றிப்படமாக அமைந்தது. தமிழ் ராக்கர்ஸ் இணையத் தொடரும் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

இந்நிலையில் அறிவழகனுடன் அருண்விஜய் மீண்டும் இணைந்திருப்பது,அவருடைய திரைப்பயணத்துக்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது என்கிறார்கள்.

ரெட்ட தல படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் அறிவழகன் படத்தில் நடிக்க தேதிகள் கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாராம் அருண் விஜய்.

Related Posts