சினிமா செய்திகள்

தனுஷ் நடித்த ஆங்கிலப்படத்தின் தமிழாக்கம் மறுவெளியீடு – இரசிகர்கள் மகிழ்ச்சி

தனுஷ் நடிப்பில் ஆங்கிலம் மற்றும் ப்ரெஞ்ச் ஆகிய மொழிகளில் உருவான படம் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆப் த பகிர்’.ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கி உள்ளார்.

ஹாலிவுட் இயக்குநரின் படம் என்றாலும் அதன் கதை, இந்தியாவின் மும்பையில் இருந்து பாரிஸ் செல்லும் ஒரு தெருக்கூத்துக்கலைஞரின் வாழ்க்கை பற்றிய பதிவாக எழுதப்பட்டிருந்தது.

2018 ஆம் ஆண்டு மே மாதம் உலகம் முழுவதும் திரைக்குக் கொண்டு வந்தனர்.

தமிழிலும் இந்தப்படத்தை ‘வாழ்க்கையைத் தேடி நானும்’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இப்படத்தின் முதல் பார்வையை 2018 ஆம் ஆண்டு கேன்ஸ் பட விழாவில் தனுஷ் வெளியிட்டார்.

அதன்பின் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இப்படம் இந்தியா முழுவதும் திரையிடப்பட்டது.

முதலில் திட்டமிட்ட ‘வாழ்க்கையைத் தேடி நானும்’ என்ற தலைப்பை ‘பக்கிரி’ என்று மாற்றி படத்தை வெளியிட்டனர்.

இதுகுறித்து அப்போது தனுஷ் கூறியதாவது….

‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆப் த பகிர்’ படம் இந்தியாவில் திரைக்கு வருவது எனக்குப் பெருமையாக இருக்கிறது. நான் கடினமாக உழைக்கவும், வித்தியாசமான கதைகளில் நடிக்கவும் இரசிகர்கள் ஊக்குவித்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்தத்தகவலை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைக்கிறேன் என்றார்.

அப்போது, ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசி இப்படத்தை வெளியிட்டார்.

படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்ற நேரத்தில் கொரோனா தாக்கம் தொடங்கியது.அப்போது வேகம் பிடித்த கொரோனா சிக்கல் திரையுலகத்தைப் பெரிதும் பாதித்தது.ஊரடங்குக்கு முந்தைய காலகட்டம் எனினும் திரைப்படங்களுக்கு மக்கள் வரத் தயங்கிய காலம் என்பதால் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு வசூலாக மாறவில்லை.

அதனால் இப்படத்தை இப்போது மீண்டும் வெளியிடவுள்ளனர்.

நகைச்சுவை பெரிதும் கலந்து பல நல்ல கருத்துகளைச் சொன்ன இந்தப்படம் சுமார் ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வெளியாகிறது.
ஏ.பி.இண்டர்நேசனல் நிறுவனம் வெளியிடும் இப்படம் மார்ச் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்தப்படத்தின் கதை,திரைக்கதை,வசனங்கள் ஆகியன அப்போதே பெரிதும் இரசிக்கப்பட்டன.பான் இந்தியா படங்கள், உலகப்படங்கள் என எல்லாமும் கிடைக்கும் இக்காலகட்டத்தில் வெளியிடப்படும் இப்படம் நிச்சயம் பெரியவெற்றியை ஈட்டித்தரும் என்று படக்குழுவினர் உறுதியாக நம்புகிறார்கள்.

நம்பிக்கை பலிக்கட்டும்.

இச்செய்தி வெளியானதும் தனுஷ் இரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு அதைக் கொண்டாடி வருகின்றனர்.

Related Posts