சினிமா செய்திகள்

விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கவில்லை – ஏன்?

அஜீத் நடிக்கும் விடாமுயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இதில் சஞ்சய்தத், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா கசன்ட்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடக்கிறது.இரண்டு மூன்று கட்டங்களாக நடந்த படப்பிடிப்புக்கு இப்போது இடைவெளி.அடுத்தகட்டப் படப்பிடிப்பு அஜர்பைஜானில் மார்ச் 15 முதல் இருக்கும் என்று சொல்லப்பட்டது.
ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை.

ஏன்?

இந்தக் கேள்விக்கு விடையாக ஒன்றுக்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அவை…

1. சில நாட்களுக்கு முன் திடீரென அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காதுக்குக் கீழே உள்ள நரம்பில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் இரண்டொரு நாளில் வீடு திரும்பினார்.இப்போது வீட்டில் ஓய்விலிருக்கிறார். சில வாரங்கள் அவருக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகச் சொல்கிறார்கள்.இதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை.அஜீத் முழுமையாகத் தயாரானதும் படப்பிடிப்பு தொடங்கும்.

2.இப்படத்தைத் தயாரிக்கும் லைகா புரொக்டன்ஸ் நிறுவனம் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது.இதனால் இப்படத்தின் படப்பிடிப்புக்கான செலவுத் தொகையை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.விரைவில் சிக்கல் சரிசெய்யப்பட்டு பணம் வந்துவிடும், வந்தவுடன் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவார்கள்.

3.அஜீத் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருக்கிறார் என்பதும் தயாரிப்பு நிறுவனம் பணச்சிக்கலில் இருக்கிறது என்பதிலும் உண்மையில்லை.அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்வதில் சில சிக்கல்கள். அதனால் சரியான இடங்கள் தேர்வு செய்து அவற்றிற்கு முறையான அனுமதி வாங்கும் வேலைகளை இப்போது நடந்துவருகின்றன.அது சில நாட்களில் முடிந்துவிடும் அதன்பின் படப்பிடிப்புக்குக் கிளம்பிச் செல்வார்கள்.

இப்படி மூன்று வகையான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இவற்றைவிட இன்னொரு பெரிய,உறுதிப்படுத்தப்படாத தகவலொன்றும் உலவுகிறது. அது என்னவெனில்? லைகா தயாரிப்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்புத்தோற்றத்தில் நடித்த லால்சலாம் படத்தில் நடந்ததுபோலவே இப்படத்தின் படப்பிடிப்பு நடத்திய காட்சிகள் காணாமல் போய்விட்டன என்பதுதான்.அவற்றை மீட்டெடுக்கும் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

இவற்றில் எது சரி? எவ்வளவு சரி? என்பதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

Related Posts