கார்த்தி நடிக்கும் புதியபடம் – இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் விவரம்
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் முத்தையா இயக்கத்தில் விருமன் ஆகிய இருபடங்களில் நடித்து முடித்துள்ளார் நடிகர் கார்த்தி.
அவற்றிற்குப்பின், இப்போது பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார்.இப்படத்தை பிரின்ஸ் ஃபிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இவற்றிற்கடுத்து கார்த்தி நடிக்கும் படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.
அதேசமயம், அடுத்த படத்துக்கான கதை மற்றும் இயக்குநரைத் தேர்வு செய்துவிட்டாராம் கார்த்தி.
அண்மையில், ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து வெளியான பேச்சிலர் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது, அப்படத்தை இயக்கியவர் புது இயக்குநர் சதீஷ் செல்வகுமார்.
அவர், நடிகர் கார்த்திக்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார். அக்கதை கார்த்திக்குப் பிடித்திருக்கிறதாம். அதனால் அக்கதையை முழுநீளத் திரைக்கதையாக உருவாக்குமாறு பணித்திருக்கிறாராம் கார்த்தி.
உடனே, ட்ரீம்வாரியர் நிறுவனம் சதீஷ்செல்வகுமாருக்கு முன் தொகை கொடுத்து இயக்குநராக ஒப்பந்தம் செய்துவிட்டதாம்.
இப்போது, திரைக்கதை உருவாக்க வேலைகளில் ஈடுபட்டிருக்கிறாராம் சதீஷ்செல்வகுமார்.
ஆக, கார்த்தியின் அடுத்த படத்தைத் தயாரிக்கவிருப்பது ட்ரீம்வாரியர் நிறுவனம் என்பதும் சதீஷ்செல்வகுமார் இயக்குகிறார் என்பதும் உறுதியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள்.












