September 21, 2026
சினிமா செய்திகள் நடிகர்

பின்வாசல் வழியாக வரும் பிரபுதேவா – அதிர்ச்சியில் திரையுலகம்

இயக்குநர் கார்த்திக்சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் முதல்பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கும் படம் மெர்க்குரி.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வசனங்களே இல்லாத இந்தப் படம், ஒரு சைலண்ட் த்ரில்லராக உருவாகி இருக்கிறது. பின்னணி இசையின் மூலமே நகரும் இந்தப் படத்தில் பிரபுதேவா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான விருந்தாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம்  வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்திரையுலகில் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், திட்டமிட்டபடி படம் வெளியாகாது என்று சொல்லப்பட்டது.
ஆனால் படத்தைத் திட்டமிட்டபடி ஏப்ரல் 13 ஆம் நாள் வெளியிட  படத்தைத் தயாரித்திருக்கும் பென் மூவிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். அது எப்படி? தயாரிப்பாளர்கள் சங்கத்தை மீறி எப்படி வெளியிட முடியும்?
 இந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் பென் மூவிஸ் மும்பையை மையமாகக் கொண்ட நிறுவனம். இப்படத்தில் வசனங்களே இல்லை என்பதால் இதைத் தமிழ்ப்படம் என்று மட்டுமே சொல்லமுடியாது.
ஏற்கெனவே இப்படத்தைத் தென்னிந்தியா முழுதும் வெளியிடத் திட்டமிட்டிருந்தோம். அதன்படி, கேரளா,ஆந்திரா, கர்நாடகாவில் வெளியிடவிருக்கிறோம். தமிழகத்தில் தமிழ்ப்படங்கள் மட்டும்தானே திரையிடமுடியாது. இதைத் தெலுங்குப் படம் என்று சொல்லி தமிழகத்தில் வெளியிடுவோம் என்று பென் மூவிஸ் சொல்லிக்கொண்டிருக்கிறதாம்.
இப்படி ஒரு திருப்பத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் என்ன செய்வதெனத் தெரியாமல் தயாரிப்பாளர்கள் சங்கமே குழம்பியிருப்பதாகத் தகவல்.

Related Posts