சினிமா செய்திகள்

தக்லைஃப் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் விலை – விவரம்

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தக் லைஃப்.இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் கமலும் சிம்புவும் அப்பா மகனாக நடித்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.ஒரு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இப்படம் 2025 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியீட்டுக்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இப்படத்தின் வியாபார வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பின்னான இணைய ஒளிபரப்பு உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான விலை சுமார் நூற்றைம்பது கோடி என்றும் சொல்லப்பட்டது.இத்தகவல் வெளியாகி சுமார் எட்டு மாதங்கள் ஆகிவிட்டன.

ஆனால் இதுவரை அப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனை குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

ஏனெனில், இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்கான தொகையாக சுமார் தொண்ணூறு கோடியை தயாரிப்பு நிறுவனம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

அவ்வளவு தொகை கொடுத்து இப்படத்தை வாங்க தொலைக்காட்சி நிறுவனங்கள் முன்வரவில்லை என்பதால் வியாபாரம் முடியாமல் இழுத்துக் கொண்டிருந்ததாம்.

இப்போது அதுவும் முடிவாகிவிட்டது என்கிறார்கள்.

இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியிருக்கிறதாம்.அதற்காக அந்நிறுவனம் கொடுப்பதாகச் சொல்லியிருக்கும் தொகை சுமார் அறுபது கோடி என்றும் சொல்லப்படுகிறது.

இத்தொகை தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டன என்றும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இந்தப்படத்தை விஜய் தொலைக்காட்சி வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்ததால் அதற்குப் பிரதியுபகாரமாக மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க கமல் ஒப்புக்கொள்வார் என்றொரு தகவலும் உலவிக் கொண்டிருக்கிறது.

அப்படி நடந்தால், தக்லைஃப் வியாபாரத்தின் மூலம் படக்குழுவுக்கும் இலாபம் விஜய் தொலைக்காட்சிக்கும் இலாபம் என்கிற நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts