இரண்டு பாகங்களாக வருகிறது துருவநட்சத்திரம் – உற்சாகத்தில் படக்குழு
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்’.
இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
இப்படம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு சிக்கல்களால் தாமதமாகிவந்தது.
இப்போது படத்தை வெளியிடும் முற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள்.
இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருக்கிறது என்றாலும் அதற்கு முன்பாக இதுவரை எடுத்த காட்சிகளைத் தொகுத்துப் பார்த்தார்களாம்.
பார்த்தவுடன் அனைவருக்கும் உற்சாகம் ஆகிவிட்டதாம். காரணம் என்னவென்றால்? படம் மிக நன்றாக வந்திருக்கிறது என்பதோடு ஏற்கெனவே திட்டமிட்டதைக் காட்டிலும் மேலும் சில காட்சிகளைச் சேர்த்தால் இரண்டு பாகங்களாகப் படத்தை வெளியிடலாம் என்கிற மாதிரி கச்சிதமாக இருந்ததாம்.
நாயகன் விக்ரமும் இதை ஒப்புக்கொண்டாராம். அதோடு வேகவேகமாக படத்தின் குரல்பதிவை முடித்துக் கொடுத்திருக்கிறாராம்.
இன்னும் சில நாட்களில் முதல்பாகம் முழுவதுமாகத் தயாராகிவிடும் என்கிறார்கள்.
இதனால், கெளதம்மேனன் குழு மற்றும் தயாரிப்பாளர் பி.மதன் ஆகியோர் மிகுந்த உற்சாகத்தோடு பணியாற்றிவருகிறார்கள்.











