மாமன் படத்துக்குக் கிடைத்த விலை – வியப்பூட்டும் தகவல்

விமல் நடித்த விலங்கு இணையத் தொடர் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன் திரைப்படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார்.இப்படத்தின் கதையும் சூரியுடையதே. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப்படத்துக்கு இசை – ஹேசம் அப்துல் வஹாப்,
ஒளிப்பதிவு – தினேஷ் புருஷோத்தமன்,கலை இயக்கம் – ஜி.துரை ராஜ்,படத்தொகுப்பு – கணேஷ் சிவா
சண்டைப்பயிற்சி – மகேஷ் மேத்யூ
கருடன் படத்தின் வெற்றிக்குப்பிறகு, லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இது.
திருச்சி பின்னணியில் நடக்கும் கதைக்களத்தில், ஆறுவயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவைப் பேசும் படைப்பாக இப்படம் உருவாகி இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இரசிக்கும் வண்ணம், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் திரையரங்க வெளியீட்டுக்குப் பின்னான இணைய ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றை ஜீ தமிழ் நிறுவனம் பெற்றுள்ளது.இத்தகவலை படத்தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்காக அந்நிறுவனம் கொடுத்துள்ள தொகை சுமார் பதிமூன்று கோடி எனச் சொல்லப்படுகிறது.
சூரி நாயகனாக நடிக்கும் படத்துக்கு,திரையரங்க வெளியீட்டுக்கு முன்பே வியாபாரம் நடந்திருப்பதும் அதற்கு இவ்வளவு விலை கொடுக்கப்படுகிறது என்பதும் திரையுலகில் வியப்பை ஏற்படுத்தும் செய்தியாக இருக்கிறது.
இந்த வியாபாரத்துக்குப் பின்னணியாக இன்னொரு தகவலும் சொல்லப்படுகிறது. இப்படத்தில் சூரி நாயகன் என்பது மட்டுமின்றி,இப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜனும் காரணம் என்கிறார்கள்.அவர், இதற்கு முன் இயக்கிய விலங்கு தொடரை வெளியிட்டது ஜீ நிறுவனம் தான். அதன் காரணமாகவும் இந்தப்படத்துக்கு இவ்வளவு விலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.