திரையரங்க நுழைவுக் கட்டணம் குறைப்பு – பராசக்தி பட நிறுவனத்தின் வியத்தகு உத்தரவு
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன்,அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி.இந்தப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார்.
இப்படம் 2026 ஆம் ஆண்டு தமிழர் திருநாளையொட்டி சனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்துக்குத் தணிக்கைக் குழுவில் யு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தயாரிப்பு நிறுவனம்,திரையரங்குகளுக்கு வைத்துள்ள வேண்டுகோள் வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
வழக்கமாக, இதுபோன்ற பெரிய நடிகர்கள் கூட்டம் மற்றும் பெரிய பொருட்செலவு நடைபெற்ற படங்கள் வெளியாகும்போது, முதல்நாள் முதல்காட்சிகான நுழைவுச்சீட்டை அதிக விலைக்கு விறக்ச் சொல்லி நிர்ப்பந்திப்பார்கள். விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களும் அந்தப்படத்துக்காக அதிகத் தொகை கொடுத்து படத்தைத் திரையிடுவதால் ஐநூறு ஆயிரம் என்று கட்டணம் நிர்ணயித்து விற்பனை செய்வார்கள்.
அதற்கு நேர்மாறாக, பராசக்தி படம் வெளியாகும் நாளில் டிக்கெட் கட்டணத்தைக் குறைத்து விற்கச் சொல்லி தயாரிப்பு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளதாம்.
வழக்கமாக, அரசாணைப்படி ரூபாய் 190 வரை நுழைவுச்சீட்டுக் கட்டணம் நிர்ணயித்துக் கொள்ளலாம்.பொதுவாக இதுபோன்ற பெரிய படங்கள் வரும்போது உச்சபட்ச கட்டணமான ரூ 190 க்கு விற்பனை செய்வார்கள். தனிப்பட்ட திரையரங்குகளில் ரூ 150 வரை விற்பனை செய்வார்கள்.
பராசக்தி படத்தயாரிப்பு நிறுவனம், பல்லடுக்கு திரையரங்குகள் இப்படத்துக்கான நுழைவுச் சீட்டை ரூ 120 க்கு மேல் விற்கவேண்டாம் என்றும் தனிப்பட்ட திரையரங்குகள் ரூ 100 க்கு மேல் வசூலிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியிருக்கிறதாம்.
அப்படிக் குறைத்து விற்பனை செய்வதன் மூலம் இன்னும் கூடுதலான மக்கள் படம் பார்க்க வருவார்கள் என்பது அவர்களுடைய எண்ணம் என்று சொல்லப்படுகிறது.
இப்போதெல்லாம் பெரும்பாலான படங்களுக்கு மக்கள் கூட்டம் வராமல் இருப்பதற்கு நுழைவுக் கட்டணம் அதிகமாக இருப்பது ஒரு பெரிய காரணம் என்று சொல்லப்படும் நேரத்தில், பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையிலும் இப்படத்துக்கு நுழைவுக்கட்டணத்தை அதிக விலைக்கு விற்கச் சொல்வதற்கு நேர்மாறாக விலை குறைத்து விற்கச் சொல்லியிருப்பது ஒரு நல்ல முன்னுதாரணம் என்று சொல்லப்படுகிறது.
பராசக்தி படக்குழு செய்திருக்கும் இதை, பெரிய கதாநாயகர்களை வைத்துப் படமெடுக்கும் எல்லாப் படக்குழுவினரும் கடைபிடித்தால் மக்களுக்கு நல்லது.











