ஜனநாயகன் மீது என்ன புகார்? – நீதிமன்றத்தில் நடந்ததென்ன?
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் தைப்பொங்களையொட்டி சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால்,படம் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் பெறாமல் இருக்கிறது.
இந்நிலையில்,படத்துக்கு உடனே தணிக்கை சான்று வழங்குமாறு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், நேற்று காலை தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு ஆஜராகி, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.அதை ஏற்ற நீதிபதி, விசாரணை மதியம் நடைபெறும் என்று தெரிவித்தார். இதையடுத்து மதியம் விசாரணை தொடங்கியது.
அப்போது, படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி, 500 கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் கடந்த டிசம்பர் மாதம் சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை ஆய்வு செய்த சென்சார் போர்டு, சில காட்சிகளை நீக்கவும், வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியது. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்து படம் மீண்டும் சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மீண்டும் படத்தை ஆய்வு செய்த சென்சார் போர்டு, படம், யு/ஏ சான்று பெறத் தகுதி உள்ளது என்று சென்சார் போர்டு தலைவருக்கு பரிந்துரைத்தது. இந்த நிலையில், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாக படத்துக்கு எதிராக புகார் வந்துள்ளதாகக் கூறி படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு சென்சார் போர்டு அனுப்பி வைத்தது. இந்தப் படத்தை சென்சார் போர்டு உறுப்பினர்கள் தவிர ஒருவரும் பார்க்காத நிலையில் எப்படி புகார் அளிக்கப்பட்டது? எனவே, படத்துக்கு சான்று வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
தணிக்கை வாரியம் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாக புகார் வந்ததால் மறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் சான்று வழங்க வேண்டும் என்று சென்சார் போர்டை நிர்பந்திக்க முடியாது என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, படத்துக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை நாளை (இன்று) தாக்கல் செய்யுமாறு தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்த போது,வெளியீட்டுத் தேதி அறிவித்துவிட்டதால் விரைந்து உத்தரவிட வேண்டும் என்று படநிறுவனம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
அதற்கு, ரிலீஸ் தேதியை முடிவு செய்தாலும் சட்டப்படிதான் செல்ல முடியும். சென்சார் போர்டு அறிவுறுத்தல்களைப் பெற வேண்டும் என்று சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, படத்தை ஏன் 10 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கக்கூடாது? தை பிறந்தால் வழி பிறக்குமே? என்று படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பிடம் நீதிபதி கூறினார்.
அதற்கு, படம் வெளியாகும் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதை மாற்றினால் பெரும் இழப்பு ஏற்படும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து இன்று மதியம் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்தப்படம் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி என்கிற படத்தின் தமிழாக்கம் என்று செய்திகள் வந்தன.இந்தப்படத்தின் முன்னோட்டமும் அதை உறுதிப்படுத்தும் விதமாக இருந்தது.இதனால் அந்தப்படத்தில் உள்ள காட்சிகள் இப்படத்திலும் இடம்பெற்றிருக்கின்றன அவை மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றன என்று புகார் வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அந்தப் புகாரை அளித்தது யார்? அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? என்பது இன்று நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் தாக்கல் செய்வதன் மூலம் தெரியவரும் என்று சொல்கிறார்கள்.












