விஜய்சேதுபதிக்கு வந்த திடீர் சிக்கல்
இலங்கை மட்டைப்பந்தாட்ட அணியின் முன்னணி வீரராக இருந்து ஓய்வு பெற்றவர் முத்தையா முரளிதரன். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்.
தற்போது இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மஹிந்த ராஜபக்சேவின் சகோதரரான கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முரளிதரன் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் கொழும்புவில் நேற்று கோத்தபாய ராஜபக்ச ஏற்படுத்திய வியத்மக என்ற அமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசிய முரளிதரன்,
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதான பேச்சுவார்த்தைகளின் போது பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அப்பாவி மக்களைப் படுகொலை செய்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட அன்றுதான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
இனி இந்த நாட்டில் அமைதியாக வாழ முடியும் என்று எனக்குத் தோன்றியது அப்போதுதான். இலங்கையைப் பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த ஒரு அரசியல்வாதிதான் அடுத்ததாக அதிபராக ஆட்சிக்கு வர வேண்டும். மக்கள் பிரச்சனைகளுக்கு அனுபவம் உள்ள ஒருவரால்தான் தீர்வு காணவும் முடியும்
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் அப்பட்டமான தமிழினப்படுகொலை செய்த ராஜபக்ச தம்பிக்கு ஆதரவாகவும் அவர் பேசியிருப்பதால் உலகத்தமிழர்களின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாகியுள்ளார்.
இதனால் நடிகர் விஜய்சேதுபதிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒருவரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவர் நடிக்கவே கூடாது என்னும் குரல்கள் வேகமாக ஒலிக்கத் தொடங்கிவிட்டன.
அவர் என்ன முடிவெடுக்கப் போகிறாரோ?











