சினிமா செய்திகள்

நயன்தாராவும் விஜய்சேதுபதியும் இப்படிச் செய்யலாமா? – தகிக்கும் விமர்சனம்

2021 ஜூன் 3 முதல் அமேசான் இணையத்தில் ஒளிபரப்பப்பட்டுள்ள தி ஃபேமிலிமேன் 2 தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் இழிவாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

இதனால் இத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் தொடரை எடுத்தவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் இருக்கின்றன.

அத்தொடரில் நடித்துள்ள சமந்தா,பிரியாமணி, மைம்கோபி, அழகம்பெருமாள் உள்ளிட்ட தமிழ் நடிகர்களையும் புறக்கணிக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டது.

இச்சர்ச்சைகளை மீறி அத்தொடர் இன்னும் இருக்கிறது. இதனால் தமிழ் மக்கள் மனம் புண்பட்டுள்ளனர்.

ஆனால், தமிழ் மக்களின் உணர்வுகளைக் கொஞ்சமும் மதிக்காமல், அந்த தப்பான தொடரை இயக்கிய தெலுங்கு இயக்குநர்கள் ராஜ், டீகே ஆகியோரின் அடுத்த தொடரில் விஜய்சேதுபதி நடிக்கிறார்.

இப்போது, 2021 ஆம் ஆண்டுக்கான மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா கொரோனா தொற்று காரணமாக இணையம் வழியாகவே நடந்தது. இதில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரு விருதுகள் சூர்யாவின் சூரரைப்போற்று படத்துக்கு கிடைத்தன. சிறந்த நடிகைக்கான விருது ‘தி பேமிலி மேன் 2’ இணையத் தொடரில் நடித்ததற்காக சமந்தாவுக்குக் கிடைத்தது.

இதை. ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். விஜய்சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் சமந்தாவுக்கு தங்கள் வாழ்த்துகளைக் கூறியுள்ளனர்.

அத்தோடு அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்கள்.

இது தமிழ் மக்களை மேலும் நோகடிக்கும் விதமாக உள்ளது என தமிழ் உணர்வாளர்கள் கொதித்துவருகின்றனர்.

தி ஃபேமிலிமேன் 2 தொடரில் நடித்தமைக்காக சமந்தாவைப் புறக்கணிப்போம் என்று கோபம் கொண்டிருக்கும் நேரத்தில், இவை எதுவுமே நடக்காதது போல அவரைப் பாராட்டி அதைப் பொதுவெளியிலும் பகிர்ந்திருப்பதால் விஜய்சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ்சிவன் ஆகியோரும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருப்பது வெளிப்படையாகியிருக்கிறது என்கிற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Related Posts