திரையரங்கு உரிமையாளர்கள் முடிவுக்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு எதிர்ப்பு
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளீயான இரண்டு வாரங்களில் இணைய ஒளிபரப்பு உரிமை கொடுத்ததால் பல சர்ச்சைகள் ஏற்பட்டன.
அதனால், ஒரு படம் வெளியாகும் போதே, சிறிய படங்கள் 30 நாட்கள் வரையும் பெரிய படங்கள் 50 நாட்கள் வரையிலும் இணையத்துக்குக் கொடுக்கமாட்டோம் என்கிற உறுதிமொழிக் கடிதம் கொடுக்க வேண்டுமென்றும் அப்படிக் கொடுத்தால்தான் படங்கள் திரையிடப்படும் என்றும் திரையரங்கினர் அறிவித்துள்ளனர்.
இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஆனாலும் இந்த நடைமுறைப்படி உறுதிமொழிக் கடிதம் கொடுக்கும் படங்கள் மட்டுமே திரையிடப்படும் என்று விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவருடைய டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது….
இந்த விசயத்தில் சங்கங்களுக்கிடையேயான பரஸ்பர ஒப்புதலால் மட்டுமே சரியான முடிவை அடைய முடியும்.திரைப்படத்துறையின் முழு செயல்களையும் ஒரு சங்கம் மட்டுமே தீர்மானிக்க முடியாது. தொழில்நுட்பம் வளர்ந்து வரும் விதத்தைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்திற்கான சரியான பாதையை அமைப்பது எல்லோருடைய கடமை என்பதை உணரவேண்டும் என்று கூறியுள்ளார்.











