சமுத்திரக்கனியின் ஏலே திரைப்பட வெளியீடு – கடைசி நேரத்தில் திடீர் சிக்கல்
‘ஓரம்போ’ படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் புஷ்கர் – காயத்ரி. ‘விக்ரம் வேதா’ தந்த வெற்றிக்குப் பிறகு, ‘வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.
வால் வாட்ச்சர் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ‘ஏலே’ படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் ஆகியன இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
சமுத்திரக்கனி, மணிகண்டன், மதுமதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்தை பூவரசம் பீப்பி, சில்லுக்கருப்பட்டி ஆகிய படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் எழுதி இயக்கியுள்ளார்.
இந்தப்படம் குறித்த அறிவிப்பு 2019 மே 2 ஆம் தேதி வெளியானது. அன்றைய தினமே படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.2019 ஜூன் 30 ஆம் தேதியுடன் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்கள்.
படப்பிடிப்புக்குப் பின்பான பணிகள் நிறைவடைந்து பிப்ரவரி 12 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவித்தார்கள்.
வெளியீட்டு அறிவிப்பைத் தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக இருந்தார்கள்.
இந்நிலையில், கடைசி நேரத்தில் பட வெளீயீட்டில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளீயான இரண்டு வாரங்களில் இணைய ஒளிபரப்பு உரிமை கொடுத்ததால் பல சர்ச்சைகள் ஏற்பட்டன.
அதனால், ஒரு படம் வெளியாகும் போதே, சிறிய படங்கள் 30 நாட்கள் வரையும் பெரிய படங்கள் 50 நாட்கள் வரையிலும் இணையத்துக்குக் கொடுக்கமாட்டோம் என்கிற உறுதிமொழிக் கடிதம் கொடுக்க வேண்டுமென்றும் அப்படிக் கொடுத்தால்தான் படங்கள் திரையிடப்படும் என்றும் திரையரங்கினர் அறிவித்துள்ளனர்.
இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஆனாலும் இந்த நடைமுறைப்படி உறுதிமொழிக் கடிதம் கொடுக்கவில்லை என்பதால் ஏலே திரைப்படத்தைத் திரையிட திரையரங்கினர் முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால்தான் கடைசி நேரத்தில் அப்பட வெளியீடு சிக்கலாகியிருக்கிறது என்கிறார்கள்.











