சர்கார் படத்துக்குத் தடை வருமா? – பரபரக்கும் திரையுலகம்
விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம், தீபாவளியன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், ‘சர்கார்’ படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும், ‘சர்கார்’ படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு மனுவில், ‘செங்கோல்’ என்ற தலைப்பில் நான் கதை எழுதினேன். இந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். இந்த நிலையில், என்னுடைய கதையைத் திருடி, ‘சர்கார்’ என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கியுள்ளார்.
இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்தேன். அந்த சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ், இருதரப்பையும் அழைத்து விசாரித்தார். இறுதியில், இருவரது கதையும், ஒரே கதை தான் என்று தெரிவித்துள்ளார். எனவே, ‘சர்கார்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அந்தப் படத்தின் கதை என்னுடையது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி எம்.சுந்தர் முன்பு மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் எம்.புருஷோத்தமன் முறையிட்டார்.
அதற்கு நீதிபதி, ஏற்கனவே எதிர்தரப்பினர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கு மனுவை எதிர்தரப்பினருக்கு வழங்கவேண்டும். இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.











