September 17, 2026
சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியின் நூறுசாமியை ரெட்ஜெயண்ட் வெளியிடுகிறது – விவரம்

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய்ஆண்டனி,சுவாசிகா,அஜய் திஷான்,லிஜோ மோல் ஜோஸ்,கருணாஸ்,சக்தி,காவ்யா அனில்,பாலாஜி சக்திவேல்,அருள்தாஸ்,மூர்த்தி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை விஜய்ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பாத்திமா விஜய்ஆண்டனி தயாரிக்க,மீரா விஜய்ஆண்டனி வழங்குகிறார்.

ஜூன் 19 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தப்படத்தை குமரன் ஃபிலிம்ஸ் சிதம்பரம் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக,அவர் சுமார் ஏழுகோடி ரூபாய் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.டிஸ்டிரிபியூசன் எனும் விநியோக அடிப்படையில் இந்த வியாபாரம் நடந்திருக்கிறது என்கிறார்கள்.

அதேசமயம்,இந்தப் படத்தை வெளியிட திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது ரெட்ஜெயண்ட் நிறுவனம் என்கிறார்கள்.

அவர்கள் எப்படி என்றால்?

கும்ரன் ஃபிலிம்ஸ் சிதம்பரம்,ரெட்ஜெயண்ட் நிறுவனத்துடன் இணைந்துதான் இந்தப்படத்தை வெளியிடுகிறார்.இதற்காகக் கொடுக்கப்பட்ட முன்பணத்தில் ரெட்ஜெயண்ட் நிறுவனத்தின் பங்கும் இருக்கிறது.இதுபோல் பல படங்களுக்கு ரெட்ஜெயண்ட் பெயர் போடாமல் இதுபோன்று பங்களிப்புச் செய்வது வழக்கம்தான் என்கிறார்கள்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.க. ஆட்சி அகன்ற பிறகு, ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் ஆதிக்கம் ஒழிந்துவிட்டது. இப்போது திரையுலகினர் எந்தவொரு மிரட்டலும் இல்லாமல் நிம்மதியாக வேலை செய்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

ஆனால்,நூறுசாமி படத்தை ஜூன் 19 ஆம் தேதி வெளியிட முடிவு செய்ததும்,இந்தத் தேதியில் ஜனநாயகன் படம் வருகிறதா? இல்லையா? என்கிற சந்தேகத்தைத் தீர்க்க முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தார் விஜய் ஆண்டனி.அந்தச் சந்திப்புக்குப் பிறகுதான் ஜூன் 19 அன்று இந்தப்படம் வெளியாகும் என்று அறிவித்தார்.

அவருடைய படத்தையே ரெட்ஜெயண்ட் நிறுவனம்தான் வெளியிடுகிறது என்பது நகைமுரண் என்று திரையுலகில் பேச்சு.

இப்படம் மட்டுமல்ல ஜூன் 5 ஆம் தேதி வெளியான பரிமளா அண்ட் கோ படத்தையும் ரெட்ஜெயண்ட் நிறுவனம்தான் வெளியிட்டது.

அமைச்சர் சொல்லியதுபோல் அவர்கள் அமைதியாக இல்லை.அவர்களைத் தேடிவரும் படங்களை நிபந்தனைகள் ஒத்துவந்தால் விநியோகம் செய்வதில் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை என்று திரையுலகினர் சொல்கிறார்கள்.

Related Posts