September 18, 2026
சினிமா செய்திகள்

நம்பிப்போன விநியோகஸ்தர் அடிவயிற்றில் அடித்த சுந்தர்சி – திரையுலக பரபரப்பு

சுந்தர்சி குஷ்பு இணையரின் படத்தயாரிப்பு நிறுவனம் அவ்னி சினிமேக்ஸ்.இந்நிறுவனம் ஏ.சி.சண்முகம் மகன் ஏ.சி.எஸ்.அருண்குமாரின் பென்ஸ் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து படங்கள் தயாரித்துவருகிறது.இவற்றில் பென்ஸ் மீடியா பணம் முதலீடு செய்யும் அவ்னி சினிமேக்ஸ் நிர்வாகம் செய்து படம் தயாரித்துக் கொடுக்கும்.

இந்நிறுவனங்களின் தயாரிப்பில் கடந்த ஜூன் 12 அன்று வெளியான படம் டபுள் ஆக்குபன்சி.அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி எழுதி இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் வளரும் நடிகர் சந்தோஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.நாயகிகளாக சம்யுக்தா விஸ்வநாத்,ரேஷ்மா வெங்கடேஷ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இந்தப்படம் தயாராகி சில மாதங்கள் ஆனபின்பும் இதன் வியாபாரம் நடக்கவில்லை.அதனால்,இந்தப்படத்தை வாங்கினால்,இதற்கடுத்து இவர்கள் தயாரிக்கும் மீசைய முறுக்கு 2, புருசன் ஆகிய படங்களையும் கொடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதனால்,இந்தப்படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வந்திருக்கிறார்கள்.அப்போது இந்தப்படத்துக்கு விலை ஐந்து கோடி அதுவும் எம்ஜி அடிப்படையில்தான் கொடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்தப்படத்துக்கு ஐந்து கோடி என்பது மிகமிக அதிகம் என்று விநியோகஸ்தர்கள் வாங்க மறுத்தபோது,நம்மிடம் அடுத்தடுத்து படங்கள் இருக்கின்றன,எனவே நம்பி வாங்குங்கள் என்று சுந்தர்சி சொல்லியிருக்கிறார்.

அதைநம்பி,இந்தப்படத்தை ஐந்து கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.

படம் ஜூன் 12 வெளியானது.அன்று தமிழகம் முழுக்க இதன் வசூல் மொத்தம் ஆறு இலட்சம் ரூபாய்தானாம்.அடுத்தநாள் 18 இலட்சம் வந்ததாகவும் மூன்றாவது நாளும் அதேஅளவில் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இன்று அந்தப்படத்துக்கு ஆட்கள் வரமாட்டார்கள் என்பது திரையரங்கினர் கருத்து.

இதுவரை வந்த தொகை இதர செலவுகளுக்குக்கூடப் போதாது,இதனால் ஐந்து கோடியும் அப்படியே போச்சே என்று தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டாராம் விநியோகஸ்தர்.

இதுதொடர்பாக,சுந்தர்சியிடம் பேசவேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.அதற்கு,ஒப்பந்தத்தை முழுமையாகப் படித்துவிட்டுப் பேச வாருங்கள் என்று சுந்தர்.சி தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த ஒப்பந்தத்தில்,இந்தப்படத்துக்குக் கொடுக்கும் தொகை இந்தப் படத்துக்கானது மட்டும்தான்.இதில் நட்டம் ஏற்பட்டால் அடுத்தபடங்களில் சலுகை கொடுங்கள் என்று கேட்கக் கூடாது என்று குறிப்பிட்டிருக்கிறார்களாம்.

இதை சற்றும் எதிர்பாராத விநியோகஸ்தர் இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.

இதனால்,சுந்தர்சியை நம்பி ஒரு சின்னப் படத்துக்குப் பெரும் தொகையை முதலீடு செய்தார் அந்த விநியோகஸ்தர்,அவரை அடிவயிற்றில் அடித்துவிட்டார் சுந்தர்சி என்று திரையுலகம் முழுக்க பரபரப்பான பேச்சு.

Related Posts