நகைச்சுவை வேடத்தில் நடிப்பதுதான் கஷ்டம் – விஷ்ணுவிஷால் வெளிப்படை
விஷ்ணு விஷால் நடிப்பில் 2022 டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘கட்டா குஸ்தி’.அப்படத்தின் இரண்டாம் பாகம் ‘கட்டா குஸ்தி 2’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது.இப்படத்தில் முதல்பாகத்தில் நடித்த நட்சத்திரங்களுடன் ரம்யாகிருஷ்ணன்,யோகி பாபு,கருணாகரன் உள்ளிட்ட பல புதிய நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர்.
செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்ய,ஜெயச்சந்திரன் கலைஇயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கே.கணேஷ் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப்படம்,ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், படக்குழுவினர் ஜூன் 16 அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து படம் குறித்த பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
இயக்குநர் செல்லா அய்யாவு படம் பற்றிக் கூறியதாவது….
முதல்பாகம் முடித்தபோது இரண்டாம் பாகம் எடுக்கவேண்டும் என்ற யோசனை இல்லை.விஷ்ணு விஷால் என்னிடம் கேட்டபோதுதான் பண்ணலாம் என்று தோன்றியது.என்னிடம் இருந்த ஒரு யோசனையைச் சொன்னேன்.அதுபற்றி இருவரும் அரைமணிநேரம் பேசினோம். கட்டா குஸ்தி 2 உருவாகிவிட்டது.
கட்டாகுஸ்தி படத்தில் இருக்கும் பல விசயங்கள் இதிலும் இருக்கிறது.ஆனால் அவை அனைத்துமே வித்தியாசமான முறையில் இருக்கும்.முதல்பாகத்தில் ஐஸ்வர்யா லட்சுமி பற்றி எந்த விபரமும் தெரியாமல் இருப்பது,இடைவேளையில் மிகப்பெரிய திருப்பமாக இருந்தது.அது படத்துக்குப் பெரியபலமாக இருந்தது.அப்படி ஒரு திருப்பம் இந்தப்படத்திலும் இருக்கிறது.அது படம் பார்க்கும்போது தெரியும் என்றார்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதாவது….
நான் நடிகையானது எனக்குக் கிடைத்த வரம் என்று நினைக்கிறேன்.கட்டா குஸ்தி போன்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, எங்கேயோ நான் செய்த புண்ணியம் என்றுதான் கருதுகிறேன்.பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ஒருகதையில் நடித்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.கதை கேட்கும்போதே இதைத் தவறவிடக்கூடாது என்று நினைத்தேன்.இப்போது கட்டா குஸ்தி 2 பாகம் கிடைத்திருப்பது பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.முதல்பாகம் போல் இதிலும் என்னை மையப்படுத்தித்தான் கதை நகர்கிறது.நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் என்றார்.
கட்டா குஸ்தி 2,விஷ்ணுவிஷால் படங்களில் அதிகம் இலாபம் கொடுத்த மற்றும் பெரிய வியாபாரம் ஆன படம்.படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசுக்கு பெரிய இலாபம் கிடைத்திருக்கிறது.
இந்த மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் படம் பற்றிக் கூறியதாவது…..
எனக்குப் பல வெற்றிப்படங்கள் அமைந்தும் அவற்றின் இரண்டாம்பாகம் செய்யமுடியாமல் போய்விட்டது.கதை சொல்லும்போதே இரண்டாம்பாகம் இருப்பதாகத்தான் சொல்வார்கள்,ஆனால் ஏதோ சில காரணங்களால் பண்ணமுடியாமல் போய்விடும்.‘ராட்சசன்’, ’முண்டாசுப்பட்டி,’இன்று நேற்று நாளை’ ஆகிய படங்கள் இரண்டாம்பாகம் பண்ணவேண்டியது,முடியவில்லை.எஃப்.ஐ.ஆர் படத்தின் கதைகூட இரண்டுபாகங்களாக எடுக்க வேண்டியிருந்தது.அதுவும் பண்ண முடியவில்லை.அதனால்,எப்படியாவது ஒரு படத்தின் இரண்டாம்பாகத்தை எடுத்துவிடவேண்டும் என்று நினைத்துத்தான் செல்லாவிடம் பேசி இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் எடுத்திருக்கிறோம்.
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பது ஏன்? என்கிற கேள்வி எல்லோரும் கேட்கிறார்கள்.இதற்கு நான் ஏற்கெனவே பதில் அளித்திருக்கிறேன். என் வாழ்க்கையில் பெண்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
என் தந்தை மிகவும் கஷ்ட்டப்பட்டு படித்துத்தான் ஐபிஎஸ் ஆனார்.அவரைத் தொடர்ந்து என் குடும்பத்தில் என் அக்கா சிறப்பாகப் படித்து,இன்று உலகளவில் முக்கியமாக இருக்கும் ஒரு வங்கியில் முக்கியபொறுப்பில் இருக்கிறார். அவரது முன்னேற்றத்திற்குப் பிறகுதான் எங்கள் குடும்பம் முன்னேற்றம் அடைந்தது.என் சினிமா பயணத்திற்கும் அவர்தான் உறுதுணையாக இருக்கிறார்.அதனால்தான் நான் தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறேன்.இந்தப்படத்தில் இணைதயாரிப்பு என்று அவர் பெயர் வரும்.அவர் பெயர் சுப்ரா.என் அம்மா,எங்கள் குடும்பத்தைப் பொறுப்புடன் கவனித்துக் கொண்டார்.என் அக்காவின் முன்னேற்றத்திற்கு என் அம்மாவின் உழைப்பும் ஒரு காரணம்.அப்பா காவல்துறை அதிகாரி என்பதால்,பல ஊர்களுக்கு மாறுதல் பெற்றுச் செல்வோம்.அடிக்கடி பள்ளிகள் மாறும்.அப்பா வீட்டில் இருக்கமாட்டார்.அம்மாதான் குடும்பத்தைப் பொறுப்புடன் பார்த்துக் கொள்வார்.
குடும்ப முன்னேற்றத்தில் பெண்களது பங்கு இருக்கும்போது,நான் ஏன் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கக்கூடாது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிச்சயம் இப்படிப்பட்ட படங்களில் நடிப்பேன்.
பெண்கள் இப்படிச் செய்யலாமா?ஆண்கள் இப்படி இருக்கலாமா? என்ற பழைய பாணியை உடைக்கும் படமாக ‘கட்டா குஸ்தி 2’ இருக்கும்.முதல்பாகத்தில் இருந்த அனைத்து விசயங்களும் நேர்மாறாக இருக்கும்.மனைவியை தேசியஅளவிலான போட்டியில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று ஆசைப்படும் கணவர்,அதற்கு என்னவெல்லாம் செய்கிறார்? அதனால் ஏற்படும் சிக்கல்களை எப்படிச் சமாளிக்கிறார்? என்பதுதான் கதை.அதில் எதிர்பார்க்காத சில விசயங்களை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறோம்.
காமெடி வேடத்தில் நடிப்பது இருப்பதிலேயே மிகவும் கஷ்ட்மானது.செண்டிமெண்ட்,ஆக்ஷன் போன்றவற்றை நான் எளிதாகச் செய்துவிடுவேன், நகைச்சுவைதான் கஷ்டம்.அதற்குக் காரணம் டைமிங்.டைமிங் சரியில்லை என்றால் அது காமெடியாக இருக்காது,போரடித்து விடும்.எனவே காமெடிதான் கஷ்டம் என்பேன்.அதேபோல்,மக்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருப்பதற்குத்தான் திரைப்படங்களைப் பார்க்கிறார்கள்.அப்படிப்பட்ட படங்கள் மக்களைச் சிரிக்கவைக்கவேண்டும்.கருத்துச் சொல்லும் படங்கள் எடுக்கலாம்.அதற்காக காமெடி படங்கள் எடுக்காமல் இருக்கக்கூடாது.இதுபோன்ற படங்கள் அதிகம் வெளியாகவேண்டும்.ஒருவருடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு காமெடி படத்திலாவது நடிக்கவேண்டும் என்ற முடிவில் நான் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.











