சொல்லி அடித்த விஷால் – வீரமே வாகை சூடும் வியாபார வியப்பு
புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்திருக்கிறார்.இவர்களோடு யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் சனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று திரையரங்குகளில் வெளியிடவுள்ளதாகப் படக்குழு சொல்லியிருந்தது.ஆனால், தற்போது ஒரு நாளுக்கு மூன்று காட்சிகள் மட்டுமே திரையிட முடியும் எனும் நிலை மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியனவற்றால் பட வெளியீடு தள்ளிப்போகிறது.
அதேசமயம், இப்படத்தின் வியாபாரம் நாற்பது கோடியைத் தாண்டியிருக்கிறது. இது திரையுலகுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாகக் கூறுகின்றனர்.
இப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை சுப்பையா சண்முகம் பெற்றுள்ளார். இவர் சிம்புவின் மாநாடு படத்தை வாங்கி வெளியிட்டவர்.
இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை விலை சுமார் பத்தரை கோடி என்று சொல்லப்படுகிறது.
படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணைய வெளியீட்டு உரிமை விலை பதினேழரைக் கோடியாம். ஜீ தமிழ் தொலைக்காட்சி இவ்வளவு விலை கொடுத்து வாங்கியிருக்கிறதாம்.
அடுத்து இப்படத்தின் இந்தி உரிமை எட்டேமுக்கால் கோடிக்கு விற்றிருக்கிறதாம். லால்வானி என்பவர் வாங்கியிருக்கிறாராம்.
வெளிநாட்டு விநியோக உரிமை மற்றும் தெலுங்கு, கன்னட உரிமை ஆகியனவற்றைச் சேர்த்தால் நாற்பது கோடிக்கும் மேலேயே வருகிறது.
என் படம் இவ்வளவு விலைக்கு விற்கும் என்று தயாரிப்பாளர்களிடம் அடித்துப் பேசி வந்த விஷால், தான் தயாரிக்கும் படத்தை நாற்பது கோடிக்கு மேல் வியாபாரம் செய்து மெய்ப்பித்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.











