பொன்னியின் செல்வன் படக்குழு இலங்கைப் பயணம் கடைசி நேரத்தில் இரத்து ஏன்?
மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்தது.
அவற்றைத் தொடர்ந்து வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனோ வைரஸ் சிக்கல் காரணமாக வடமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த இயலவில்லை. அதனால், ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் படப்பிடிப்புத் தளத்தில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டனர்.அங்கும் படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டன.
அதனால் பொன்னியின் செல்வன் வேலைகளும் நின்று போயின.
இப்போது மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டு வந்தார்கள். அதற்காக இலங்கை சென்று படப்பிடிப்பை நடத்தலாம் என்றும் மணிரத்னம் திட்டமிட்டாராம்.
இதற்காக அங்கு படப்பிடிப்பு நடந்தால் ஆகும் செலவு குறித்த விவரங்களைச் சேகரிக்கச் சொல்லியிருந்தார்.
கிடைத்த விவரங்கள் மணிரத்னத்தின் எண்ணத்துக்கேற்ப அமைந்திருந்ததால் அங்குபோய் படப்பிடிப்பு நடத்தத் தயார் செய்யச் சொன்னாராம் மணிரத்னம்.
செப்டெம்பர் 20 முதல் படப்பிடிப்பு தொடங்குகிற மாதிரி வேகமாக வேலைகள் நடந்து கொண்டிருந்தனவாம்.
திடீரென வேலைகளை அப்படியே நிறுத்திவிடச் சொல்லிவிட்டாராம் மணிரத்னம்.
எதனால் வேலைகள் நிறுத்தப்பட்டன என்ற காரணம் பலருக்குச் சொல்லப்படவில்லையாம்.
அதற்குக் காரணம், தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த பரணி என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதுதான் என்கிறார்கள்.
அதனாலேயே மொத்த வேலைகளையும் நிறுத்தியதோடு அலுவலகத்தையும் மூடச்சொல்லிவிட்டாராம்.
மீண்டும் படப்பிடிப்பு எப்போது? என்றால் டிசம்பரில் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறாராம் மணிரத்னம்.











