சினிமா செய்திகள்

முத்தையா இயக்கும் புதியபடம் அமரன்விஜய் – விவரங்கள்

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்த காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம் 2023 ஜூன் மாதம் வெளியானது. அதற்கடுத்து முத்தையா இயக்கும் படம் குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை.

ஆனால், அவர் சும்மா இல்லை. அடுத்த படத்துக்கான வேலைகளில் திவீரமாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அடுத்து அருண்விஜய்யைக் கதாநாயகனாக வைத்து ஒரு படம் எடுக்கும் திட்டத்தில் இருந்தார்.அருண்விஜய்க்கும் அந்தக் கதை பிடித்ததாம். ஆனால் இப்போது அவர் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களை முடிக்கவேண்டும் என்பதோடு,முத்தையா சொன்ன கதையைப் படமாக்கும் செலவு மிக அதிகம் ஆகும் என்பதால் தொடங்கவியலாமல் இருக்கிறதென்றும் சொல்கிறார்கள்.

இதனால், ஏற்கெனவே முத்தையா இயக்கத்தில் தனித்தனியாக நடித்திருக்கும் கவுதம்கார்த்திக், விக்ரம்பிரபு ஆகிய இருவரையும் நாயகர்களாக நடிக்க வைத்து ஒரு படம் எடுக்கத் திட்டமிட்டாராம். ஆனால் அதுவும் எண்ணிய மாதிரி நடக்கவில்லை.

எனவே, அதிரடியாக அவர் எடுத்திருக்கும் முடிவு என்னவென்றால்?

அவர் மகனையே கதாநாயகனாக நடிக்க வைத்து ஒரு படம் இயக்குவது என்று முடிவு செய்துவிட்டாராம்.

இந்தப்படத்திலும் மதுரை மண் மணம் இருக்கும் என்பதோடு அங்கு பதின்ம வயதுக்காரர்கள் மத்தியில் புழங்கும் போதை கலாச்சாரத்துக்கு எதிரான படமாகவும் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

போதை கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட படமென்பதால் அதற்கு வலுச்சேர்ப்பதற்கும் மகனின் அறிமுகம் பரபரப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் ஒரு வேலை செய்திருக்கிறார்.

அது?

1992 ஆம் ஆண்டு கே.இராஜேஸ்வர் இயக்கத்தில் கார்த்திக், பானுப்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் அமரன். அந்தப்படத்துக்கு ஆதித்யன் இசையில் அப்படத்தின் பாடல்கள் பெருவெற்றி பெற்றவை.அப்படத்தின் நாயகன் கார்த்திக் மற்றும் நடிகை ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் பாடிய பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை.

அவற்றில், நாயகன் கார்த்திக் பாடிய பாடலான, வெத்தல போட்ட சோக்குல நான் கப்புனு குத்தினேன் மூக்குல என்கிற பாடலின் உரிமையை விலைக்கு வாங்கி, அதையே மகனுக்கான அறிமுகப்பாடலாக வைக்கவிருக்கிறாராம் முத்தையா.

அதோடு அப்படத்துக்கு அமரன்விஜய் என்று பெயர் வைத்துள்ளார் எனச் சொல்லப்படுகிறது.

இப்படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் முடிவடைந்துவிட்டன என்றும், விரைவில் அதாவது பிப்ரவரி 22 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதென்றும் சொல்கிறார்கள்.

Related Posts